

மும்பை
சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 1,503.95 புள்ளிகள் அதிகரித்து 39,434.72 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 436.95 புள்ளிகள் முன்னேறி 11,844.10 புள்ளிகளாக இருந்தது.
கருத்துக் கணிப்புகள்
வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று பங்கு வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக விறுவிறுப்பாக இருந்தது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி நாடே காத்திருந்த நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளால் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்தது. எனவே முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அது சந்தைகளை கிடுகிடு ஏற்றம் காண செய்தது. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் சாதகமாக இருந்தது. வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,421.90 புள்ளிகள் அதிகரித்தது. நிப்டி 421.10 புள்ளிகள் உயர்ந்தது.
லாப நோக்கம்
மூன்று தினங்கள் ஏற்றம் கண்ட நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.
கடந்த திங்கள்கிழமை அன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டிருந்தது. எனவே முதலீட்டாளர்கள் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி லாப நோக்கத்துடன் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்தனர். அது சந்தைகள் சரிய முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 69.76-ஆக குறைந்ததும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.04 சதவீதம் உயர்ந்ததும் பங்கு வியாபாரத்தை பாதித்தது. இறுதியில் சென்செக்ஸ் 382.87 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. நிப்டி 119.15 புள்ளிகள் குறைந்தது.
தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்புகளால் புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது.
வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இருந்தது. கருத்துக் கணிப்புகள் பாரதீய ஜனதாவின் அமோக வெற்றியை உறுதி செய்திருந்த நிலையில் முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையால் முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளும் அவர்களுக்கு ஊக்கம் அளித்தன. எனவே சந்தைகள் ஏற்றம் கண்டன. வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 140 புள்ளிகள் அதிகரித்தது. நிப்டி 28.80 புள்ளிகள் உயர்ந்தது.
கிடுகிடு ஏற்றம்
வியாழக்கிழமை அன்று பங்கு வியாபாரம் முதலில் எழுந்து பின்னர் வீழ்ச்சி கண்டது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் பங்கு வர்த்தகம் தொடக்கத்தில் விறுவிறுப்பாக இருந்தது. எனினும் ரூபாய் மதிப்பு குறைந்தது, இதர ஆசிய நாடுகளில் பங்கு வியாபாரம் சுணங்கியது போன்றவற்றால் போகப் போக பின்னடைவு ஏற்பட்டது. மேலும் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் பங்குகளை விற்பனை செய்ததாலும் சரிவு ஏற்பட்டது. இறுதியில் சென்செக்ஸ் 298.82 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. நிப்டி 80.85 புள்ளிகள் குறைந்தது.
அறுதிப் பெரும்பான்மை
வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது.
நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தனிப்பட்ட முறையில் அக்கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியதால் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக முதலீட்டாளர்கள் கருதினர். எனவே பங்கு வர்த்தகம் சிலிர்த்துக் கொண்டது.
வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 623.33 புள்ளிகள் அதிகரித்து 39,434.72 புள்ளிகளில் நிலைகொண்டது. நிப்டி 187.05 புள்ளிகள் உயர்ந்து 11,844.10 புள்ளிகளில் முடிவுற்றது.