

மும்பை
வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று பங்கு வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக விறுவிறுப்பாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,422 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 421 புள்ளிகள் முன்னேறியது.
கருத்துக் கணிப்பு
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை நோக்கி நாடே காத்திருக்கும் நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின அதில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து நேற்று முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அது சந்தைகளை கிடுகிடுவென ஏற்றம் காண செய்தது. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் சாதகமாக இருந்தது.
அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் உயர்ந்தன. அதில் மூலதன பொருள்கள் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 5.62 சதவீதம் ஏற்றம் கண்டது. அடுத்து தொழில் துறை குறியீட்டு எண் 5.57 சதவீதம் உயர்ந்தது.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 28 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 2 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் இண்டஸ் இந்த் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், யெஸ் வங்கி, எல் அண்டு டி, எச்.டீ.எப்.சி., மாருதி சுசுகி, ஓ.என்.ஜி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏஷியன் பெயிண்ட், பார்தி ஏர்டெல், வேதாந்தா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட 28 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ் ஆகிய 2 நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் குறைந்தது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,421.90 புள்ளிகள் அதிகரித்து 39,352.67 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 39,412.56 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,570.04 புள்ளிகளுக்கும் சென்றது. இந்தச் சந்தையில் 2,019 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 609 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 185 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.3,584 கோடியாக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அது ரூ.2,440 கோடியாக இருந்தது.
நிப்டி
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 421.10 புள்ளிகள் உயர்ந்து 11,828.25 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,845.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,591.70 புள்ளிகளுக்கும் சென்றது.