

மும்பை
வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று பெரும் சரிவை தடுத்து நிறுத்தும் வகையில் 45 நிமிடங்கள் பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. பங்குச்சந்தைகள் வீழ்ந்து எழுந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 433 புள்ளிகள் முன்னேறியது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வந்த நிலையில் ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் இதனை உலக கொள்ளை நோய் என அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பீதி உச்சத்தை எட்டியதால் உலக அளவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வந்தன. விமானச் சேவை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் முடங்கி இருக்கும் நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, அன்னிய முதலீடு மேலும் வெளியேறியது, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை இந்திய பங்கு வர்த்தகத்தை சீர்குலையச் செய்தன. எனவே கடந்த திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
மீண்டும் பெரும் சரிவு
கொரோனா பீதியால் உலகமே குலுங்கி உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் குறுகிய கால அடிப்படையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றே நிபுணர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது மீண்டும் பெரும் சரிவு ஏற்பட்டது. எனவே ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகளை இழந்தது. நிப்டியும் பலத்த சரிவை சந்திக்க மேலும் அதிக வீழ்ச்சியை தடுக்கும் வகையில் சர்க்யூட் பிரேக்கர் தொழில்நுட்பம் மூலம் பங்கு வர்த்தகம் மதியம் 1 மணிக்கு நிறுத்தப்பட்டது. 45 நிமிடங்கள் கழிந்த பின் 1.45 மணிக்கு மீண்டும் வர்த்தகம் தொடங்கியது.
அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், பல மைய வங்கிகளும் ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்க தயாராகி இருப்பதாக தகவல் வெளியானதால் ஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் தொடங்கின. அதன் தாக்கத்தால் இந்திய சந்தைகளும் எழுச்சி கண்டன. உள்நாட்டைப் பொறுத்தவரை ரூபாய் மதிப்பு சரிவை தடுத்தும் நிறுத்தும் வகையில் 200 கோடி அளவிற்கு அமெரிக்க டாலர் புழக்கத்தை அதிகரிக்கப் போவதாக பாரத ரிசர்வ் வங்கி அறிவித்ததும் பெரும் ஊக்கம் அளிப்பதாக இருந்தது.
குறியீட்டு எண்கள்
அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் அனைத்து துறை குறியீட்டு எண்களும் உயர்ந்தன. அதில் தொலைத் தொடர்புத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 6.39 சதவீதம் அதிகரித்தது. அடுத்து உலோகத் துறை குறியீட்டு எண் 5.85 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டு எண் 5.58 சதவீதமும் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 25 பங்குகளின் விலை உயர்ந்தது. 5 பங்குகளின் விலை சரிவடைந்தது.
இந்தப் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல், எச்.டீ.எப்.சி., சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 25 பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. அதே சமயம் நெஸ்லே இந்தியா, ஏஷியன் பெயிண்ட், இந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோ மோட்டோகார்ப், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஆகிய 5 பங்குகளின் விலை குறைந்தது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,325.34 புள்ளிகள் அதிகரித்து 34,103.48 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 34,769.48 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 29,388.97 புள்ளிகளுக்கும் சென்றது.
இந்தச் சந்தையில் 1,244 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,143 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 162 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.4,099 கோடியாக உயர்ந்தது. கடந்த வியாழக்கிழமை அன்று அது ரூ.3,288 கோடியாக இருந்தது.
தேசிய பங்குச்சந்தை
தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 433.50 புள்ளிகள் உயர்ந்து 10,023.65 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 10,159.40 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 8,555.15 புள்ளிகளுக்கும் சென்றது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு