படிப்பு நின்றது.. நடிப்பு வென்றது..

இந்தி திரை உலக இளம் நட்சத்திரம் திஷா பதானி. இவர் அழகிப் போட்டி, மாடலிங், சினிமா என்று தனது இதுவரையிலான பயணம் பற்றிப் பேசுகிறார்!
திஷா பதானி
திஷா பதானி
Published on

சிறுவயதில் நான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவளாக இருந்தேன். யாருடனும் பேச மாட்டேன். அதனால் 15 வயது வரை எனக்குத் தோழிகள் யாரும் கிடையாது. இப்படிப்பட்ட சுபாவம் கொண்ட நான், ஒருநாள் மாடலாகவும் நடிகையாகவும் ஆவேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை.

எனக்கு மிஸ் இந்தியா அழகியாக மகுடம் சூடவேண்டும் என்று அம்மா விரும்பினார். அம்மாவின் ஆசைக்காகவே நான் 2013-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றேன். இரண்டாம் இடம் கிடைத்தது. பின்பு நான் மும்பைக்கு குடி பெயர்ந்தேன். எனக்கு சிறந்த மாடல் ஆகவேண்டும் என்ற கனவு இருந்தது. அதை எப்படி அடைவது என்று தெரியாமல் இருந்தேன்.

ஆனால் நானே ஆச்சரியப்படும் வகையில், மும்பைக்கு வந்த 10 நாட்களிலேயே எனக்கு முதல் விளம்பர வாய்ப்பு வந்தது. நகரெங்கும், நான் நடித்த விளம்பர போஸ்டர்களும், பிளெக்ஸ்களும் வைக்கப்பட்டன. நான் நடித்த விளம்பரப் படம் எப்போது ஒளிபரப்பாகும் என்று டி.வி. முன்பே காத்திருந்தேன்.

இயல்பாகவே, விளம்பரப் படங்களில் அதிகம் நடிக்க நடிக்க, ஆரம்பத்தில் இருந்த உற்சாகப் பரபரப்பு மாறிவிட்டது. சாக்லேட்கள் முதல், ஸ்கின் கிரீம்கள், ஆடைகள் வரை பலவற்றுக்குமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன்.

நான் மும்பையில் நேரத்தை வீணடிக்காமல் ஏதோ உருப்படியாய் பண்ணுகிறேன் என்று எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தொடர்ந்து விளம்பர வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தார்கள். விளம்பர உலகம் என்னை ஏற்றுக்கொண்டதை நினைத்து அவர்கள் பெரும் மகிழ்ச்சிகொண்டார்கள்.

ஆனால், விளம்பரப் படப்பிடிப்பு நெருக்கடிகள் காரணமாக, நான் எனது இரண்டாம் ஆண்டுடன் கல்லூரியில் இருந்து நிற்க வேண்டி வந்தது. படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என் குடும்பத்தினருக்கு அதில் வருத்தம்.

என் அப்பா போலீஸ் துறையிலும், அம்மா மருத்துவத் துறையிலும் பணியாற்றுகிறார்கள். என் சகோதரி குஷ்பூ, ராணுவத்தில் இருக்கிறாள். நானும் அவர் களைப் போல ஏதாவது பணியில் சேருவேன் என்று ஆரம்பத்தில் வீட்டில் எதிர்பார்த்தார்கள். நான் கலை சார்ந்த மனோபாவம் கொண்டிருந்ததால், மாடலிங்கிலும் நடிப்பிலும் முழுநேரமாக ஈடுபட என்னை அனு மதித்துவிட்டார்கள்.

நான் மாடலாக பணிபுரிந்த காலத்தில், திரைப்பட நடிகை தேர்வுக்குப் போவேன். அதோடு நடனம், தற்காப்புக் கலை என்று ஒரு நடிகைக்குத் தேவையான திறமைகளையும் வளர்த்துக்கொண்டேன். அதன் மூலம் என் நடிப்புத்திறன் மேம்பட்டது.

2015-ம் ஆண்டில் எனக்கு முதல்முறையாக தெலுங்கு சினிமாவில் வாய்ப்புக் கிடைத்தது. லோபர் என்ற அந்தப் படத்தில் வருண் தேஜ் ஜோடியாக நடித்தேன். அதற்கு அடுத்த ஆண்டில் எனக்கு முதல் இந்திப் பட வாய்ப்புக் கிடைத்தது. அதுதான், எம்.எஸ். டோனி: தி அன்டோல்டு ஸ்டோரி. அப்படத்தில், ஒரு துரதிர்ஷ்ட விபத்தில் உயிரிழக்கும் டோனியின் முதல் காதலியாக நான் நடித்தேன்.

வருகிற ரம்ஜானுக்கு நான் பெரிதும் எதிர்பார்த் திருக்கிற, பெரிய பட்ஜெட் படமான பாரத் வெளிவருகிறது. சல்மான்கான் ஹீரோவாக நடித்திருக்கும் வரலாற்றுப் படம் இது. அவரது வாழ்க்கைப் பயணத்தின் பின்னணியில் தேச வரலாறு காட்டப்படும். இப்படத்தில் நான் ஒரு சர்க்கஸ் கலைஞராக நடித்திருக்கிறேன்'' என்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com