வெளிநாட்டுக்கு படிக்க செல்கிறீர்களா?

வெளிநாட்டுக்கு உயர்கல்வி படிக்க செல்லும் ஆர்வமும், மோகமும் மாணவர்களிடம் மேலோங்கி உள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பை தொடர்வதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டுக்கு படிக்க செல்கிறீர்களா?
Published on

வெளிநாட்டுக்கு சென்று படிக்க முடிவு செய்துவிட்டால் முதலில் மேற்கொள்ள வேண்டிய விஷயம் விசாவுக்கு விண்ணப்பிப்பதுதான். அங்கு எத்தனை ஆண்டு கல்வி கற்க போகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துவிட வேண்டும். அதை விட முக்கியமான விஷயம் விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் தகவலை பல்கலைக்கழகத்துக்கு தெரியப்படுத்துவதுதான்.

ஏற்கனவே விசா பெற்றிருந்தாலோ, காலதாமதமாக விசா கிடைக்கும் என்றாலோ அது பற்றியும் பல்கலைக்கழகத்துக்கு உடனே தெரியப்படுத்திவிட வேண்டும். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்துவிட்டால் உடனே கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். அதற்கு தேவையான பணத்தை முன்கூட்டியே தயார் செய்துவிட வேண்டும். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தவணை முறையில் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களுடனும், அவர்கள் பின்பற்றும் கலாசாரங்களுடன் இணைந்து வாழவும் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் அங்கு செல்வதற்கு முன்பே அங்குள்ள கலாசாரங்களை தெரிந்து கொள்வது சிறப்பானது. இணைய தளங்களும், யூடியூப் வீடியோக்களும் அதற்கு உதவும்.

வெளிநாடுகளில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், அங்கு சேருவதற்கு முன்பு போட வேண்டிய தடுப்பூசிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும்.

அதில் தட்டம்மை, ரூபெல்லா, ஹெபடைடிஸ் பி, கொரோனா தடுப்பூசிகள், பூஸ்டர்கள் ஆகியவை அடங்கும். சர்வதேச பயணங்கள் மேற்கொள்வதற்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற தடுப்பூசிகளில் எவையெல்லாம் அவசியம் போட வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமான டிக்கெட் புக்கிங் செய்வதற்கு காலம் தாழ்த்தக்கூடாது. அங்கு சென்று படிப்பது உறுதியாகிவிட்ட உடனேயே விமான டிக்கெட் புக்கிங் செய்துவிடுவதுதான் நல்லது. கடைசி நேரத்தில் புக்கிங் செய்வது தேவையற்ற பதற்றத்தை வரவழைக்கும். டிக்கெட்டின் விலையும் அதிகமாக இருக்கும். ஆரம்பத்திலேயே டிக்கெட் முன் பதிவு செய்யும்போது சவுகரியமான பயணத்திற்கு திட்டமிட்டு விடலாம். பயண சலுகைகளையும் பெறலாம்.

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது பண விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். கூடுமானவரை டிஜிட்டல் பணமாக வைத்திருப்பதுதான் சிறந்தது. அங்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் சர்வதேச வங்கிகளின் ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகளை கைவசம் வைத்திருப்பது நல்லது.

அத்தகைய கார்டுகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது. வெளிநாட்டில் வங்கிக்கணக்கைத் திறக்கும் வரை ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு அவற்றை பயன்படுத்தலாம்.

வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமானது. அவசிய தேவை இருப்பின் டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளின் சீட்டுகளை உடன் எடுத்துச் செல்லலாம்.

இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லலாம். அந்த பொருட்களை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமானது.

விமான வழிகாட்டு நெறிமுறைகளை படித்து பார்த்துவிட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயங்கள் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டதாக இருக்கலாம். அதனால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com