வெளிநாட்டில் மலிவு விலையில் வீடு வாங்குவதற்கு உகந்த நகரங்கள் எவை..?

வீடு வாங்க அமெரிக்கா மிகவும் மலிவான நாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மலிவு விலையில் வீடு வாங்குவதற்கு உகந்த நகரங்கள் எவை..?
Published on

நியூயார்க்,

வெளிநாட்டில் வீடு வாங்க ஆசையா, உலகில் எந்தெந்த நகரங்களில் விலை மலிவு மற்றும் அதிகம் என்று பார்க்கலாம்.

கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது வீட்டுமனைகள் மற்றும் புதிய வீட்டின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. ரியல் எஸ்டேட் சந்தைகள் ஏற்றம் கண்டன.

இந்த நிலையில், சர்வதேச வீட்டுச் சந்தைகள் நிலவரம் பற்றி 92 நாடுகளில் டெமோகிராபியா சர்வதேச வீட்டுவசதி ஆய்வு நடத்தப்பட்டது.

ஒரு நகரத்தில் அளிக்கப்படும் ஊதியம் மற்றும் அங்கு விற்கப்படும் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு, வீட்டுவசதிக்கு ஏற்ற மலிவான நகரங்கள் மற்றும் விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஹாங்காங், அயர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சந்தைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. 2019 உடன் ஒப்பிடும்போது 2021 இல் வாங்கவே முடியாத அளவுக்கு அதிக விலை நிலவும் வீட்டுச் சந்தைகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளன என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆய்வில், வீடு வாங்க அமெரிக்கா மிகவும் மலிவான நாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மிகவும் மலிவு விலையில் அதாவது சற்று குறைந்த விலையில் வீடு வாங்க உகந்த நகரமாக அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2வது இடத்தில் அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரம் மற்றும் 3வது இடத்தில் அமெரிக்க நியூயார்க் மாகாணத்தின் ரோசெஸ்டர் நகரங்கள் உள்ளன.

உலகின் மிக விலையுயர்ந்த வீட்டுவசதி நகரங்கள் பட்டியலில் ஹங்காங் கடைசி இடத்தில் உள்ளது. அதிக விலைக்கு விற்கப்படும் வீடுகள் பட்டியலில் லண்டன் 79வது இடத்திலும், நியூயார்க் 73வது இடத்திலும் உள்ளன.

ரியல் எஸ்டேட் சந்தைகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், வெளிநாட்டினர் கனடாவில் வீடுகள் வாங்க அந்நாட்டு அரசு 2 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவின் மொனாக்கோ நகரம் அதிக விலை கொண்ட இடமாக பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் பலர் மொனாக்கோவில் தங்கள் முதன்மை வசிப்பிடமாகவோ அல்லது இரண்டாவது வீடாகவோ சொத்துக்களைக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com