உலகின் ஆபத்தான பாதை!

‘இதில் நடப்பதே உயிருக்கு ஆபத்து’ என எல்லோரும் அஞ்சி நடுங்கும் பாதை இது.
உலகின் ஆபத்தான பாதை!
Published on

 'மன்னரின் சிறிய பாதை' (El Caminito del Rey) என அழைக்கப்படும் இது ஸ்பெயின் நாட்டில் உள்ளது. ஸ்பெயினின் மாலாகா மாகாணத்தில் எல் கோரோ என்ற மலைத்தொடரில் இரண்டு பாறைகளிலிருந்து இரண்டு அருவிகள் தரையில் விழுகின்றன.

ஒன்று, கோரோ அருவி; இன்னொன்று, கெய்டானஜோ அருவி. இரண்டு அருவிகளும் கீழே விழுந்து ஒரு நதியாக இரண்டு பாறைகளுக்கு நடுவில் ஓடுகிறது.

இரண்டு அருவிகளிலும் மின்சாரம் எடுப்பதற்காக அணையும், நீர்மின் நிலையமும் நிறுவினார்கள். இதற்காக பொருட்களை எடுத்துச் செல்லவும், பணியாளர்கள் போகவும் பாறையின் பாதி உயரத்தில் விளிம்பை ஒட்டி பாதை அமைத்தார்கள். கடந்த 1905-ம் ஆண்டு பணிகள் முடிந்தன. ஸ்பெயின் மன்னர் எட்டாம் அல்போன்ஸோ இந்த ஆபத்தான பாதை வழியாகத்தான் சென்று அணையைத் தொடங்கி வைத்தார். அன்றுமுதல் 'மன்னரின் சிறிய பாதை' என இதற்குப் பெயர் வந்துவிட்டது.

தரையிலிருந்து 100 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்தப் பாதை ஒரு மீட்டர் அகலமானது. ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கு நீள்கிறது. கான்கிரீட்டில் பாதை அமைத்து, கைகளைப் பிடித்துக்கொள்ள மேலே கயிறும் அமைத்திருந்தார்கள். இதையும் தாண்டி தடுக்கி விழுந்தால் நேரே மரணம்தான்!

காலப்போக்கில் இந்தப் பாதையில் நடப்பது சாகசச் சுற்றுலா ஆனது. நூறாண்டுகளுக்கும் மேலான இந்தப் பாதையில் ஆங்காங்கே காங்கிரீட் விரிசல் விட, விஷயம் தெரியாமல் பலரும் வந்து வழுக்கி விழுந்து இறந்தார்கள்.

இதனால் கடந்த 2000-மாவது ஆண்டில் இதை மூடி விட்டார்கள். சுமார் 60 கோடி ரூபாய் செலவில் இதைப் புதுப்பித்து, சுற்றுலாப் பயணிகளுக்காக சமீபத்தில் திறந்து விட்டுள்ளார்கள். ரோப் பாதை, தொங்கு பாலங்கள் என பாதுகாப்பு இருந்தாலும், இன்னமும் உலகின் ஆபத்தான பாதை இதுதான்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com