கடும் கோடையிலும் 8 அடி ஆழத்தில் தண்ணீர் தரும் திருப்புல்லாணி கிராமம்

திருப்புல்லாணி கிராமத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைக்கிறதாம்.
கடும் கோடையிலும் 8 அடி ஆழத்தில் தண்ணீர் தரும் திருப்புல்லாணி கிராமம்
Published on

ழைநீர்... உயிர்நீர்...

- இந்த வாசகத்தின் உள் அர்த்தத்தை காலம் மக்களுக்கு உணர்த்தி வருகிறது.

சமீப காலமாக மழை பொய்த்து வருவதால் நீர்நிலைகள் வறண்டன. சென்னை உள்பட பல நகரங்களில், ஏன் கிராமங்களிலும் கூட குடிநீருக்கு பஞ்சம். நிலத்தடி நீர் மட்டுமல்ல, அதன் மீதான நம்பிக்கையும் படுபாதாளத்துக்கு போய்விட்டது. மக்கள் தவியாய் தவிக்கிறார்கள்.

ஒரு வேளை மழைநீரை சேமித்து இருந்தால் இந்த நிலை வந்திருக்காதோ என்ற யோசனை இப்போது அவர்களின் ஆழ்மனதில் எழாமல் இல்லை.

நதிகள் பாயும் மாவட்டங்களே குடிநீர் பற்றாக் குறையை சமாளிக்க திணறும் நிலையில், வறட்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் மக்கள் படும் அவதியை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கலங்கரை விளக்கமான கிராமம்

இருந்தாலும் அங்கொரு கிராமம் கலங்கரை விளக்கமாக இருந்து, மற்ற ஊர்களுக்கு மழைநீர் சேகரிப்பு என்ற நல்வழியை காட்டிக் கொண்டிருக்கிறது. பாலையிலும் நீரூற்று என்று கூறுவதைப் போல் அந்த கிராமத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைக்கிறதாம். அதுவும் நல்ல தண்ணீராம்...!

படிக்கும் போதே ஆச்சரியம் வரலாம். நேரில் பார்த்தால் இன்னும் அந்த ஆச்சரியம் அதிகரித்து புல்லரிக்கவும் வைக்கலாம்.

வாருங்கள்... கோடையிலும் பசும்பொலிவுடன் இருக்கும் அந்த திருப்புல்லாணி கிராமத்தை ஒரு விசிட் அடிக்கலாம்...!

வீணான மழைநீரை சேமித்தனர்

புகழ்வாய்ந்த 108 வைணவ திவ்யதேசங்களில் 44-வது தலம் இந்த திருப்புல்லாணியில் அமைந்துள்ளது. அங்கு ஆதிஜெகநாதராக பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.

இந்த கோவிலில் அமைந்துள்ள சக்கரதீர்த்தம்தான் அந்த பகுதி நிலத்தடி நீரை அரண் போல் காத்து வருகிறது. பாசனக்கால்வாய் கொண்ட பல கண்மாய்கள் வறண்டுவிட்டன. ஆனால் அந்த சக்கரதீர்த்தம் கடந்த 15 ஆண்டுகளாக எப்போதும் நிரம்பிய கோலத்துடன் காட்சி அளித்து வருகிறது.

அதாவது, திருப்புல்லாணி சுற்றுவட்டாரத்தில் பெய்யும் மழைநீரானது பொன்னங்கழிகானல் கால்வாய் வழியாக சென்று கீழக்கரை அருகே கடலில் கலந்து வீணாகி வந்தது.

வீணாகும் மழை நீரை சேமிக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அப்போதைய தலைவர் முனியசாமி தலைமையில் ஓர் திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி திருப்புல்லாணி அருகே மழைநீரை தடுக்க தடுப்பணை கட்டி அந்த தண்ணீரை தேக்கி வைத்து, அங்கிருந்து 3 பம்புசெட்டுகள் மூலம் தண்ணீரை இறைத்து கால்வாய் வழியாக எடுத்து சென்று 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட மதகுக்குட்டம் ஊருணி மற்றும் 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருப்புல்லாணி கோவில் சக்கரதீர்த்தம் ஆகியவற்றை நிரப்பி உள்ளனர்.

கண் போல் காக்கிறார்கள்

இதற்கான கால்வாய் ஆரம்பத்தில் மண் கால்வாயாகத்தான் இருந்தது. தற்போது ரூ.23 லட்சம் செலவில் சிமெண்டு கால்வாயாக அதனை மாற்றியதால் தண்ணீர் சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கடும் கோடையிலும் இந்த தீர்த்தம் வற்றாமல் வளமாக காட்சியளிக்கிறது.

கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கத்தைவிட பாதி அளவில்தான் அந்த பகுதியில் மழை பதிவாகி இருக்கிறது. ஆனாலும், அந்த மழைநீரும் கடலுக்கு சென்றுவிடாதபடி தடுப்பணை மூலம் தடுத்து, பின்னர் மின் மோட்டார் மூலம் ஊருணிக்கு திருப்பி உள்ளனர்.

மழைநீரை சேகரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று எனக்கூறப்படுகிறது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படியும் செய்து நீர்வளத்தை பாதுகாக்கலாம் என்று நிரூபித்து காட்டி இருக்கிறது திருப்புல்லாணி கிராமம். இதற்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் தீர்த்த குளம், மழைநீரை தடுக்கும் பொன்னங்கழிகானல் ஓடை, மதகுக்குட்டம் ஊருணி, பம்புசேட் மூலம் வெளியேற்றப்படும் நீரை எடுத்து செல்லும் கால்வாய் ஆகிய நீராதாரங்களை அப்பகுதி மக்கள் கண் போல் காக்கிறார்கள்.

இவ்வாறு பேணுவதால்தான் தற்போது 8 அடி ஆழத்திலேயே நல்ல தண்ணீர் உள்ளது. திருப்புல்லாணி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முனியசாமியின் முயற்சியால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மழைநீர் சேகரிப்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இன்றுவரை சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய தமிழக அரசின் முதன்மை செயலாளராக உள்ள டாக்டர் விஜயகுமார் ராமநாதபுரம் கலெக்டராக இருந்தபோது இந்த திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்றினார்.

மாநில அரசு விருது

மழைநீர் சேகரிப்பை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்திய நேரத்தில் அதற்கு எடுத்துக்காட்டாக இந்த திட்டம் வெற்றி பெற்றது. இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழக அரசால் மழைநீர் சேகரிப்பிற்கான விருதினை ராமநாதபுரம் மாவட்டம் பெற்றது பெருமைக்குரிய விஷயமாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com