

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் 56 வயது மருத்துவர் சூர்ய பிரகாஷ். சமூக சேவகர். கடந்த 38 ஆண்டுகளாக சமூக சேவைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்தாரி இல்லு என்ற பெயரில் ஓபன் ஹவுஸ் திட்டத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
தனது மருத்துவ பணிக்கு இடையே சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர் சூர்ய பிரகாஷ் ஐதராபாத்தில் வெகு பிரபலமாக இருக்கிறார். வெளியூர் மக்களுக்கு கூட இவரை அடையாளம் தெரிகிறது. இவரின் மனைவியும் மருத்துவராக இருக்கிறார். கொதப்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்துகிறார். இந்த கிளினிக் முதல் தளத்தில் இயங்கும் நிலையில், தரை தளம் ஓபன் ஹவுஸாக இருக்கிறது.
அதாவது திறந்த வீடு. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்டுதோறும் ஒரு நாள் கூட விடுமுறை இன்றி இந்த வீடு பயன்பாட்டில் இருக்கும். காலை ஐந்தரையில் இருந்து மதியம் ஒரு மணி வரை மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
இங்கு நுழைந்தவுடன் இரண்டு புறமும் புத்தக அலமாரிகள் உள்ளன. அவற்றில் உள்ள புத்தகங்களை வாசகர்கள் நிதானமாக அமர்ந்து வாசித்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி சமையலறையில் அரிசி, எண்ணெய், சமையல் எரிவாயு, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி சமையல் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். தனி அறையில் தங்கி ஓய்வெடுக்கலாம். இது வெளியூரில் இருந்து தேர்வெழுத வரும் மாணவர்களுக்கும் பெரியளவில் உதவி வருகிறது.
இதில் சிறப்பு என்னவென்றால் இந்த எல்லா வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து ஓபன் ஹவுஸ் மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இங்கு வருகை தருபவர்களிடம் சாதி, மதம், பாலினம் எந்த பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை.
இந்த சிறப்பான சேவையை மக்களுக்கு அளித்து வரும் மருத்துவர் சூர்ய பிரகாஷின் முயற்சியைப் பாராட்டி மனித சேவா தர்ம சம்வர்தனி, இந்தியன் சோஷியல் சர்வீஸ் காங்கிரஸ் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
பசியுடன் இருப்பவர்கள் ஓபன் ஹவுஸ் வந்து சாப்பிடலாம். சில புத்தகங்களைப் படித்து அறிவைப் பெறலாம். மக்கள் சிரித்துக்கொண்டே செல்வது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நிதி, நன்கொடைகளைப் பெறுவதில்லை. எனது வாழ்க்கை சமூக சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டதால் இந்த திட்டத்தை வணிகமாக பார்க்கவில்லை என்கிறார் மருத்துவர் சூர்ய பிரகாஷ்.