

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
வீழ்ந்த குறியீட்டு எண்கள்
கடந்த வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 2,872.83 புள்ளிகளை இழந்து 38,297.29 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி879.10 புள்ளிகள் வீழ்ந்து 11,201.75 புள்ளிகளாக இருந்தது.
இந்நிலையில், இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். சர்வதேச நிலவரங்கள், பொருளாதார புள்ளிவிவரங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் விற்பனை நிலவரம் அதை முடிவு செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பீதியால் உலகமே குலுங்கி உள்ள நிலையில் சென்ற வாரத்தில் பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. நடப்பு வாரத்திலும் அதன் தாக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜி.டீ.பி. உள்ளிட்ட முக்கிய புள்ளிவிவரங்களும் திருப்திகரமாக இல்லை. எனவே நடப்பு வாரத்திலும் வீழ்ச்சி இருக்கும் என்பதே பெரும்பாலான நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் (2019-20), டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக குறைந்து இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 5.6 சதவீதமாக இருந்தது. எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி, ஜனவரி மாதத்தில் 2.2 சதவீதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது. முந்தைய மாதத்தில் (2019 டிசம்பர்) இத்துறைகள் 1.3 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தன.
நிதி ஆண்டின் முதல் 10 மாதங் களில் (2019 ஏப்ரல்-ஜனவரி) மத்திய அரசுக்கு ரூ.9.85 லட்சம் கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. மத்திய பட்ஜெட் மறுமதிப்பீட்டில் (ரூ.7.67 லட்சம் கோடி) இது 128.5 சதவீதமாகும்.
இந்த மூன்று முக்கிய புள்ளிவிவரங்களும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு வெளிவந்தன. இதன் தாக்கத்தை இன்று சந்தைகள் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனங்கள் விற்பனை
பிப்ரவரி மாத வாகனங்கள் விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. மோட்டார் வாகனத் துறையில் தேக்கம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஹூண்டாய் பஜாஜ் ஆட்டோ, டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், அசோக் லேலண்டு ஆகிய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி புள்ளிவிவரம் அனைத்து தரப்பினரின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதாக இருக்கும்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தொடர்பாக பல புள்ளி விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பிப்ரவரி மாதம் தொடர்பாகவும், முதல் 10 மாதங்கள் (2019 ஏப்ரல்-2020 பிப்ரவரி) தொடர்பாகவும் பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவர இருக்கின்றன. இதற்கு ஏற்பவும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.
சர்வதேச நிலவரங்கள்
சர்வதேச நிலவரங்கள் இந்த வார பங்கு வர்த்தகத்தில் அதிக தாக்கம் ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சீன நிலவரம் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அது உலக பங்கு வர்த்தகத்தில் கண்டிப்பாக தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் இந்திய பங்குச்சந்தைகளும் அதனை எதிரொலிக்கும் என ஆய்வாளர்கள் கூறினர்.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற வெளிநிலவரங்களும் இந்த வார வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் முக்கிய அங்கம் வகிக்கும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.