

தூத்துக்குடி,
தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாலை, ரெயில், விமானம், கப்பல் போக்குவரத்து என நான்கு வகையான போக்குவரத்தையும் கொண்டு உள்ளது. இதனால் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றதாக அமைந்து உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மாவட்டத்தின் தொழில்வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கி வருகிறது. துறைமுகத்தைச் சார்ந்து சரக்குப் போக்குவரத்து, குடோன் வசதி, சுங்க முகவர் சேவைகள், கப்பல் தொடர்பான பணிகள் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் வளர்ச்சி பெற்று உள்ளன.
தூத்துக்குடி நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், சுமார் 450-க்கும் அதிகமாக விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் தினமும் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது.
வெப்பமான காலநிலை, அதிக சூரிய ஒளி மற்றும் கடல்நீர் ஆகியவை உப்பு உற்பத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்குகின்றன. உப்புத் தொழில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை வழங்குகிறது. உணவு உப்பு மட்டுமின்றி, தொழிற்சாலைகளுக்கு தேவையான உப்பும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் மாவட்டத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகளும் அமைந்து உள்ளன. அனல்மின் நிலையங்கள், உர உற்பத்தி நிறுவனங்கள், ரசாயன தொழிற்சாலைகள் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தூத்துக்குடி மின் உற்பத்தி கேந்திரமாக மாறி உள்ளது. அனல்மின் நிலையம் மட்டுமின்றி காற்றாலை மின்சார உற்பத்தியும் வேகமாக வளர்ந்து வருகிறது. கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகதிகளில் ஏராளமான காற்றாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி நிறுவனம், சர்வதேச மரச்சாமான்கள் உற்பத்தி பூங்கா உள்ளிட்டவையும் செயல்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில், கடலைமிட்டாய் தயாரிப்பு, அச்சுத் தொழில், அட்டைப்பெட்டி உற்பத்தி மற்றும் பருப்பு ஆலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைத் தயாரிப்பு, உடன்குடி பகுதியில் பனைவெல்லம் மற்றும் பனை சார்ந்த பொருட்கள் தயாரிப்பு தொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
தற்போது தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் மற்றொரு பரிமா ணத்தையும் எட்டி உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவது, தூத்துக்குடியின் தொழில் வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக அமைந்து உள்ளது. ஏவுதளத் தைச் சுற்றி ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் பாகங்கள், விண்வெளித் தர மின்னணு சாதனங்கள் தயாரிப்பு தொழில்கள் உருவாக்கும் வாய்ப்பும் ஏற்பட்டு உள்ளது.
இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை உள்ளடக்கிய விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலம் உருவாக்கப்படும் என்ற தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்று உள்ளது. இதன் மூலம் விண்வெளி சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், சோதனை வசதிகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களும் உருவாக வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள அல்லிக்குளம் சிப்காட் பகுதியில் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையமான இன்ஸ்பேஸ் உடன் இணைந்து விண்வெளி வாகனப் பொதுத் தொழில்நுட்ப வசதி அமைக்கப்பட உள்ளது. இது சிறு மற்றும் நடுத்தர விண்வெளித் தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பாக அமையும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் முன்னணி தொழில் மையங்களில் ஒன்றாக மேலும் வளர்ச்சி அடையும்.