

புலி, பூனைகள் இனத்தை சேர்ந்தது. புலியின் உடல் பழுப்பு கலந்த வெளிர் சிவப்பு நிற தோலை உடையது. உடல் முழுவதும் வெள்ளை மற்றும் கருப்பு நிற கோடுகள் பரவி கிடக்கும். இந்த கோடுகள் மனிதர்களின் கைரேகைகளை போல தனித்துவமானது. புலி உடலின் நடுப்பகுதியும், அடிப்பகுதியும் வெண்ணிறத்தில் முகத்தை சுற்றி ஒரு வெண்ணிற வளையம் காணப்படுகிறது. புலிகளில் 9 இனங்கள் இருந்தன. அவை பெங்கால், சைபீரியன், சுமத்ரன், இந்தோ-சைனீஸ், மலையன், தெற்கு சீன புலிகள், காஸ்பியன் ஜாவன் மற்றும் பாலி. இதில் கடைசி நான்கு இனங்கள் தற்போது இல்லை.
புலிகள் பெரும்பாலும் மான்களை விரும்பி சாப்பிடும். அடுத்ததாக காட்டு பன்றி, நீர் எருமை, கொம்பு மான்களை சாப்பிடும். இதோடு கரடி, நாய், சிறுத்தை, முதலை, மலைப்பாம்புகளையும் வேட்டையாடும் தன்மை கொண்டது. தண்ணீரில் நீந்தும் தன்மையுடையதால், நீருக்குள்ளும் வேட்டையாடும். விலங்குகளை வேட்டையாடும் போது முதலில் அதன் கழுத்தை கடித்து வேட்டையாடும் இயல்புடையது.
வரலாற்று ரீதியாக புலிகளின் வாழ்விடம் துருக்கியில் தொடங்கி தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதிகள் வரை நீள்கிறது. ஆசிய கண்டத்தின் கடற்கரை பகுதிகளிலும் வாழ்விடம் கொண்டிருந்தது. இப்போது தெற்கு, தென்கிழக்கு ஆசியா பகுதிகள், சீனா மற்றும் ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் புலிகள் வாழ்ந்து வருகின்றன. புலிகள் அனைத்து வித பருவநிலை காலங்களிலும் வாழும் தன்மை கொண்டது. செடி, கொடிகள் அடர்ந்த காடுகள், மரங்கள், சதுப்பு நிலக்காடுகள், புல்வெளிகளிலும் வாழும் தன்மை கொண்டது.
புலிகளின் இனப்பெருக்க மாதங்கள் நவம்பரில் இருந்து ஏப்ரல் வரை. இனப்பெருக்க காலம் 16 வாரங்கள், ஒரு முறை 3 முதல் 4 குட்டிகளை ஈன்றும். குட்டிப்போட்ட 8 வாரங்கள் வரை புலிக்குட்டிகள் தாய் புலிகளிடம் இருக்கும். இரண்டரை ஆண்டுகளில் தாய் புலியை விட்டு வெளியே வந்து விடும். புலிகள் தனிமையாக வாழும் பழக்கம் உடையது. அது வேட்டையாடுவதற்கு உகந்த, பரந்த இடங்களையே வாழ்வதற்கு தேர்ந்தெடுக்க கூடியது. அதிக மக்கள் தொகை கெர்ணட இந்தியா அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ள நாடாக உள்ளது. இதுவரை சுமார் 25 புலிகள் சரணாலயத்தை உருவாக்கி, அரிதான புலிகளை பாதுகாத்து வருகிறது.