ராஜஸ்தானில் நாட்டின் 52வது புலிகள் காப்பகம்: மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ்

ராஜஸ்தானில் உள்ள ராம்கர் விஷ்தாரி சரணாலயம் இந்தியாவின் 52வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நாட்டின் 52வது புலிகள் காப்பகம்: மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ்
Published on

ஜெய்ப்பூர்,

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாப்பதில், நாடு நீண்டகாலமாக வெற்றிகரமாக செயலாற்றி வருகிறது. நாட்டில் புலிகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் வனத்துறை அதிகாரிகளால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு நடவடிக்கையாக, புலிகள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு, 2014ல் ரூ.185 கோடியில் இருந்து 2022ல் ரூ.300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என் டி சி ஏ) 19வது கூட்டத்தில் பேசிய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ், புலிகளைப் பாதுகாப்பதற்கான தீவிர செயல்பாடு கொண்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என்றார்.

அந்த வகையில், ராஜஸ்தானில் உள்ள ராம்கர் விஷ்தாரி சரணாலயம் இந்தியாவின் 52வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் நேற்று தனது டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்தார்.

இந்த புலிகள் காப்பகம் பல்லுயிரியலைப் பாதுகாத்து, இப்பகுதிக்கு சுற்றுச்சூழல், சுற்றுலா மற்றும் வளர்ச்சியைக் கொண்டுவரும். இந்த புதிய புலிகள் காப்பகத்தின் பன்முகத்தன்மையானது, ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான முக்கியமான பகுதியாக அமைகிறது. மேலும், உள்ளூர் சமூக மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் உள்ள ரணதம்போர், சரிஸ்கா மற்றும் முகுந்தா சரணாலயங்களுக்கு பிறகு, ராஜஸ்தானின் நான்காவது புலிகள் காப்பகம் இதுவாகும். புதிதாக அறிவிக்கப்பட்ட புலிகள் காப்பகத்தில், அதன் வடகிழக்கில் உள்ள ரணதம்போர் புலிகள் காப்பகத்திற்கும், தெற்குப் பகுதியில் உள்ள முகுந்த்ரா ஹில்ஸ் புலிகள் காப்பகத்திற்கும் இடையே உள்ள புலிகளின் வாழ்விடமும் அடங்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com