இன்று தேசிய டாக்டர் தினம்: 'மகத்தான சேவை செய்யும் டாக்டரை போற்றுவோம்'

டாக்டர்கள் கடவுளைப் போன்றவர்கள்.
இன்று தேசிய டாக்டர் தினம்: 'மகத்தான சேவை செய்யும் டாக்டரை போற்றுவோம்'
Published on

டாக்டர்கள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி (அதாவது இன்று) தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மனித குலத்துக்கு ஆற்றும் மகத்தான சேவைக்காக டாக்டர்களின் பங்களிப்பை போற்றுவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக இரவு பகல் பாராமல் உழைத்து சேவை செய்யும் அனைத்து மருத்துவ வல்லுனர்களுக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. டாக்டர்களின் சேவைகளையும், இந்தியாவில் மருத்துவ முன்னேற்றத்திற்கான அவர்களின் பெரும் பங்களிப்பையும் அங்கீகரிப்பதற்காக டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

டாக்டர் பிதான் சந்திர ராய்

புகழ்பெற்ற டாக்டரும், மேற்கு வங்காள மாநிலத்தின் 2-வது முதல்-மந்திரியுமான டாக்டர் பிதான் சந்திர ராயை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான ஜூலை 1-ந் தேதி தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அவர் 1882-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பிறந்து, 1962-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் தனது 80 வயதில் மரணம் அடைந்தார். டாக்டர் ராய்க்கு 1961-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி நாட்டின் உயரிய குடிமை விருதான 'பாரத ரத்னா விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அவர் மிகவும் மதிக்கப்பட்ட டாக்டராகவும், புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரராகவும் திகழ்ந்தார். அவர் மேற்கு வங்காளத்தின் 2-வது முதல்-மந்திரியாக 1948 முதல் 1962-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அவர் அந்த மாநிலத்தின் மாபெரும் சிற்பி என்றும் கருதப்படுகிறார். இந்திய மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றை நிறுவுவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

கடவுளை காண முடியாது...

ஒவ்வொருவரின் வாழ்விலும் டாக்டர்களின் விலைமதிப்பற்ற பங்கைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பொது மருத்துவப் பரிசோதனை முகாம்களுக்கும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சிறப்பாக பணியாற்றும் டாக்டர்களுக்கு பி.சி.ராய் விருதும் வழங்கப்படுகிறது.

இளைஞர்கள் மருத்துவத்தொழிலை தேர்ந்தெடுத்து அதனை அர்ப்பணிப்புடன் பின்பற்ற ஊக்குவிப்பதற்காக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாம் கடவுளை காண முடியாது, ஆனால் இவ்வுலகில் டாக்டர்கள் கடவுளைப் போன்றவர்கள், அவர் நம்மை நோயில் இருந்து குணப்படுத்தி, சிறந்த முறையில் வாழ்வதற்கான வாழ்க்கையை தருகிறார் என்று சொல்வது முற்றிலும் உண்மையே.

X

Daily Thanthi
www.dailythanthi.com