நிலத்தை அளந்த சரித்திரம்

இன்று ஓர் அங்குல இடத்துக்குகூட தகராறு ஏற்பட்டு விடுகிறது
நிலத்தை அளந்த சரித்திரம்
Published on

மனித இனம் தோன்றிய காலங்களில் யாரும் நிலத்துக்கு உரிமை கொண்டாடியது இல்லை. ஆனால், மனிதன் ஒரே இடத்தில் எப்போது நிரந்தரமாக தங்கி வேளாண்மை செய்யத் தொடங்கினானோ அப்போதுதான் இடத்துக்கான உரிமையும் கொண்டாட தொடங்கிவிட்டான்.

மனித சரித்திரத்தை எடுத்துக்கொண்டால் முதன் முதலில் நிலத்தை அளந்து உரிமை கொண்டாடியவர்கள் எகிப்தியர்கள்தான். நைல் நதியில் வெள்ளம் ஏற்பட்டு, நிலத்தில் பாய்ந்து நில எல்லைகளை அழித்துவிடும். ஒவ்வொருமுறையும் நிலத்தை அளந்து தங்களுக்கான நிலத்தை பிரித்திருக்கிறார்கள். இந்த நடைமுறை கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. இப்படி நிலத்தை அளந்து அதை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து வைக்கும் பழக்கத்தையும் முதன் முதலில் உலகுக்கு தந்தவர்களும் எகிப்தியர்களே.

கி.மு.3000-ல் தயாரிக்கப்பட்ட எகிப்தின் நிலப்பதிவேடு சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நில அளவு முறைதான் அவர்கள் மிகத்துல்லியமான அளவுகளில் பிரமிடுகளை அமைக்க உதவியது.

நிலப் பதிவேடுகள் தயாரிப்பில் எகிப்தியர்கள் முந்திக்கொண்டாலும், நிலத்தை முதன் முதலாக மேப் போன்ற வரைபடமாக வரைந்தவர்கள் பாபிலோனியர்களே. மிகப் பழமையான நில வரைபடம் கி.மு.2300-ல் உருவாக்கப்பட்டது.

இந்த வரைபடங்களை பச்சை களிமண் பலகைகளில் வரைந்து, பின்னர் சுடப்பட்டுள்ளன. அந்த வரைபடங்களில் மக்கள் வாழுமிடங்கள், விவசாய நிலங்கள், நீராதாரங்கள், பாசனக் கால்வாய்கள், விலங்குகளை வேட்டையாடும் பகுதிகள், நில எல்லைகள் மற்றும் மலைகள், நதிகள் போன்ற நிலத்தின் அமைப்புகளும் வரையப்பட்டிருந்தன.

அந்த வரைபடங்களில் நகரங்கள், கிராமங்கள், வயல்கள் இவற்றிற்கு ஊடாக செல்லும் பாதைகளும் மிகப்பெரிய கட்டுமானங்கள் நடக்கும் பகுதிகளும் காட்டப்பட்டுள்ளன என்பது இன்றைக்கும் ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது.

கி.மு. 6-ம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவஞானியும் புவியியல் வல்லுனருமான ஹெகாட்டியஸ் என்பவர் முதன் முதலாக உலக வரைபடத்தை உருவாக்கினார். அதில் உலகம் ஒரு தீவாகவும் சுற்றிலும் கடல் இருப்பதாகவும், உலகின் நடு மையமாக கிரேக்கம் இருப்பதாகவும் ஒரு வரைபடத்தை வரைந்தார். ஒரு வழியாக கி.மு.350-ல் அரிஸ்ட்டாட்டில் காலத்தில் பூமி உருண்டை வடிவமானது என்று அறிஞர்கள் ஒப்புக்கொள்ள தொடங்கினார்கள்.

அப்போது கணிதமேதையும் கிரேக்க புவியியல் வல்லுனருமான எராட்டோஸ்தினஸ் பூமியின் சுற்றளவைத் திரிகோண அளவை முறையில் கணக்கிட்டு வரைந்த உலக வரைபடம்தான் இன்றைய உலக வரைபடங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. இப்படித்தான் நிலத்தை அளந்த சரித்திரம் தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com