கடலிலும் மகளிர் சாதனை...!

நாளை (ஜூன் 8-ந் தேதி) சர்வதேச கடல் தினம்.
கடலிலும் மகளிர் சாதனை...!
Published on

ஒவ்வொரு வருடமும் ஜூன் 8-ந் தேதி சர்வதேச கடல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக இத்தினத்தைக் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் கனடா இண்டர்நேஷனல் சென்டர் பார் ஓஷன் டெவெலப்மெண்ட் என்ற அமைப்பும், ஓஷன் இன்ஸ்டிடியூட் ஆப் கனடா என்ற அமைப்பும் கலந்து முடிவு எடுத்தது. 2002-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல அமைப்புகள் இந்த எண்ணத்தை ஆதரித்து வந்தாலும், இறுதியாக 2008-ம் ஆண்டில் தான் ஐக்கியநாடுகளின் சபை இதை அங்கீகரித்தது. ஆகையால் 2009-ம் ஆண்டிலிருந்து எல்லா நாடுகளும் இந்நாளை அவ்வாறே கொண்டாடி வருகின்றன. சமீபகாலமாக மனிதனின் பல செயல்களால் கடல் மாசு அடைந்து கொண்டு வருகிறது. அதன் மூலமாக கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. உலக சீதோஷ்ண மாறுபாடுகளும் ஏற்படுகின்றன. இசைபட வாழும் தன்மையை மனிதனின் பேராசை சீரழித்துக் கொண்டு வருகிறது. ஆகையால் கடலைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுவதற்குத் தான் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. முக்கியமாக நமது கடல்கள்; நமது பொறுப்பு என்னும் உணர்வைத் தூண்டுவதாக இத்தினம் முன்னிறுத்தப்படுகிறது

ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு பொருள் மையமாக வைக்கப்படுகிறது. இவ்வருடத்திற்கான கொண்டாடப்படும் பொருளின் தலைப்பு, பாலினமும் கடலும் என்பதாகும். ஆகையால் நாம் இந்நோக்கில் கடல் சார் வரலாற்றைப் பார்க்கலாம்.

பல நூற்றாண்டுகளாக கடலும், கப்பலும் ஆண்களின் ஆதிக்கத்தில் தான் இருந்தன. ஆனால் சென்ற நூற்றாண்டிலேயே பெண்கள் கடல் சார் கல்வியில் நாட்டம் கொண்டவர்களாக இருந்தனர். கடலைப்பற்றிய பலதுறைகள் இப்போது செழித்து வளர்ந்து வருகின்றன. கப்பல் ஓட்டுவதில் பெண்களும் ஆர்வம் கொண்டபோது முதன் முதலாக 1954 ஜனவரி 25-ந் தேதி பிறந்த ஆஸ்திரேலிய பெண்ணான கே கோட்டீ தன்னந்தனியாக, உலகை ஒரு சிறிய கப்பலில் வந்த பெருமையுடையவர் ஆனார். இந்த பெண் 37 அடி நீளமான ப்ளாக்மோர் பர்ஸ்ட் லேடி என்ற சிறிய கப்பலொன்றில் தனியாக, பயணித்து 189 நாட்களில் பல துன்பங்களுக்கு ஆளாகிய போதும் மனம் தளராமல் உலகை வலம் வந்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் சமீப நாட்களில் உலகை வலம் வந்த ஒரு கடற்படையின் கப்பல் முற்றிலும் பெண்களைக் கொண்டதாகவே இருந்தது. தரிணி என்ற இக்கப்பலில் நாவிகா சாகர் பரிக்ரமா என்ற பெயரிடப்பட்டு இந்திய கடற்படையால், உலகைச் சுற்றி வலம் வர அனுப்பப்பட்ட எல்லா மாலுமிகளும் பெண்களே. அவர்கள் எட்டு மாதங்களில் தமது சவாலை வெற்றிகரமாக முடித்தனர். அதற்குத் தலைமையாக இருந்தவர் லெப்டினண்ட் கமாண்டர் வர்த்திகா ஜோஷி என்ற பெண். மற்றவர்கள், ப்ரதிபா ஜம்வால், பி.ஸ்வாதி, எஸ்.விஜயா தேவி, பி.ஐஸ்வர்யா மற்றும் பாயல் குப்தா ஆவர். அவர்கள் கடந்த தூரம், 21,600 நாடிகல் மைல்கள்(24,857 தரை மைல்கள்). மாண்டவி (கோவா) துறைமுகத்தை 254 நாட்கள் கடலில் கழித்த பிறகு அவர்கள் கப்பல் மே 21, 2018-ல் சேர்ந்தது. இவர்கள் பூமத்திய ரேகையைக் கடந்து வந்தனர்.

தொடர்ந்து கடலைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்களும் தெரிந்து கொள்ளப்படவேண்டும். கப்பல்கள் பூமத்திய ரேகையைக் கடப்பது ஒரு முக்கிய விழாவாகவே நடத்தப்படுகிறது. நான் கப்பற்படையில் பணியாற்றிய போது 1956-ம் வருடத்தில் திடர் என்ற கப்பலில் தான் முதல் தடவையாகப் பூமத்தியரேகையைக் கடந்தேன். கப்பல்களில் இது ஒரு சிறந்த சம்பவமாக கருதப்படும். அப்போது, ஒரு மாலுமி நெப்டியூன் போல உடையணிந்து கொண்டு ஒரு நீதிமன்றம் போன்ற ஒரு அமைப்புடன் பூமத்திய ரேகையைக் கடந்ததற்காகத் தண்டனை விதித்தார். பின்னர் அவர் பரந்த மனப்பான்மையுடன், அவ்வாறு தண்டனை அனுபவித்த மாலுமிகளுக்கு மற்ற நீர்வாழ் உயிரினங்களில் இருந்து எந்த விதமான ஆபத்தும் வராமல் இருக்க அந்த உயிரினங்கள் இத்தகைய மாலுமிகளுக்கு உதவ வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுப்பார். அவ்வாறு தண்டிக்கப்பட்ட மாலுமிகளுக்கு நற்சாட்சி பத்திரங்களும் அளிக்கப்படும். தண்டனைகளில் ஒன்று டக்கிங் எனப்படுவது, அதாவது ஒரு சிறிய தொட்டியில் நீரை நிரப்பி அதில் மாலுமியின் தலையை அழுத்திப் பிடித்து மூச்சுத் திணற வைப்பதாகும். இப்போது இந்திய கப்பல்களில் நெப்டியூனுக்குப் பதிலாக வருணனை வரவழைக்கிறார்கள்.

இதைப் பற்றி நினைக்கையில், அக்காலத்தில் ஒருவிதமான கருவிகளும் இன்றி எவ்வாறு பழந்தமிழர் கடல் கடந்துப் பல நாடுகளுக்குச் சென்றார்கள் என்ற எண்ணம் பிரமிப்பூட்டுகிறது. ஏனெனில், 1969-ம் ஆண்டில் நான் சென்னை செல்வம் என்ற கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கேல்வஸ்டன் என்ற அமெரிக்கத் துறைமுகத்தில் இருந்து இந்தியா நோக்கிப் பயணித்தேன். அப்போது சூயஸ் கால்வாய் அரசியல் காரணங்களால் மூடப்பட்டுவிட்டது. வேறு வழியின்றி நாங்கள் தென் ஆப்பிரிக்காவைச் சுற்றி வரவேண்டியதாயிற்று. அப்போது மற்றொரு முறை பூமத்திய ரேகையைக் கடந்தேன். ஆனால் இருநாட்களில், கப்பலின் எந்திரக் கோளாறு காரணமாக என்ஜின் நிறுத்தப்பட்டது.

அப்போது கடலின் நீர்சுழற்சியால் கப்பல் வேகமாகத் தெற்கு நோக்கி தானாகப் பயணிக்கத் தொடங்கியது. இரண்டு நாட்கள் கடும் போராட்டத்துக்கு பின்னர்தான் எந்திரக் கோளாறு சரியானது அதன் பின்னரே எங்களால் சரியான திசையில் பயணிக்க முடிந்தது. சென்னை வந்து எங்கள் கப்பல் சேரச் சரியாக 54 நாட்கள் ஆயின. உணவுப் பொருள்களும் தேவையான அளவில் இருக்கவில்லை. அப்போதுதான் கடலின் நீர்சுழற்சிகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்று தெரிந்துகொள்ள முடிந்தது. அக்கப்பல் 45 லட்சம் டன் எடையுள்ளது. சிறிய கப்பல்கள் இவ்வாறான நிலையில் எப்படிச் சமாளித்தன என்பதும், எவ்வாறு கடல்களைக் கடந்தன என்பது பெரும் வியப்பையே ஏற்படுத்துகின்றது.

இன்று போல அன்று நவீன கருவிகள் எதுவும் இருக்கவில்லை. திசைகாட்டி கருவியாக அவர்கள் பயன்படுத்தியது மச்சயந்திரம் என்ற கருவியாகும். ஒரு கிண்ணத்தில் ஆமணக்கெண்ணெய் அதில் மற்றொரு கிண்ணமும் ஆமணக்கெண்ணெயுடன் மிதக்கும். அக்கிண்ணத்தில் ஒரு காந்தம் செலுத்தப்பட்ட மீன் போன்ற உருவத்தில் ஒரு எக்குத் தகடு மிதக்கும். இது எப்போதும் தென் வடக்காக மிதக்குமாகையால் திசை காட்டியாக இருந்தது. அதேபோல தப்பலகை என்ற மிதக்கும் பலகையொன்று கப்பலின் வேகத்தைக் காட்டிக்கொண்டிருக்கும். கடல் அன்பு நிறைந்தது. அதே நேரத்தில், பொங்கும் கடல் ஆபத்தானது கூட. மகளிர் மட்டும் முன்னர் கூறியபடி உலகைச்சுற்றி வந்தது பெரியதொரு சாதனையே.

இன்றைய கடல் சர்வதேச கடல் தினம் பாலினமும் கடலும் என்ற தலைப்பில் கொண்டாடப்படுவதால் நாமும் இன்று மேலே கூறப்பட்ட மாலுமி மகளிரின் தீரத்தைப் பாராட்டிக் கொண்டாடுவோம்.

- கே.ஆர்.ஏ.நரசய்யா, கடல்சார் ஆய்வாளர், உலக வங்கி ஆலோசகர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com