

சிந்தனை மிகவும் சக்தி வாய்ந்தது. ஆழ்ந்த சிந்தனைக்கு அதிகம் பயன் உண்டு என்கிறார், ஐன்ஸ்டீன். சிந்திக்காதவன் முட்டாள். சிந்திக்கத் தெரியாதவன் கோழை. சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் என்கிறார். செயலில் இறங்குவதற்கு முன் அதைச் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதில் இறங்கிய பின் காலம் கடத்துவது தான் தவறு. வேகத்துடன் விவேகமும் முக்கியம். புதுமைகளை விரும்பிச் செய்யுங்கள். எந்த ஒரு செயலிலும் இன்று நடைமுறையில் இருக்கும் புதுமைகளையும், நாளை வழக்கத்துக்கு வரப்போகும் புதுமைகளையும் பார்த்து உங்கள் புதுமைகளைத் தீர்மானியுங்கள்.
எதிர்காலத்தைக் கணித்து அதன்படி நடப்பது அதிக பலனைத் தரும். நாளை என்ன நடக்கும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்து அதன்படி நடப்பவர்கள் தான் இன்றைய போட்டி நிறைந்த உலகில் வெற்றி பெறுகிறார்கள். இந்த திறன் இல்லை என்றால், எவ்வளவு வேகத்துடன் செயல்பட்டாலும் பலன் இல்லாமல் போய் விடும். இலக்கு நோக்கிப் பயணிக்கும் போது எதிர்பாராமல் விழும் ஒவ்வொரு அடியும், சிகரத்தை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடி என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் அனுபவங்கள் தான் நிஜமான பொக்கிஷங்கள். நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதன் மூலம், அனுபவ பாடங்களைப் படிக்க முடியும். வெற்றிப் பயணத்திற்கு வழிகாட்டும் சக்தி அனுபவங்களுக்கு உண்டு.
வெற்றிகளை வளைத்துப் போடுவதில் ஒருவருடைய பேச்சு, மிகவும் முக்கியப் பங்கை வகிக்கிறது. பேச்சில் திறமை வாய்ந்தவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்ள முடியும். உற்சாகமாகப் பேசினால் உலகையே வளைத்துப் போடலாம். எதிரில் இருப்பவர்களை முதலில் ஈர்ப்பது நமது முகம் தான். புன்னகையுடன் காத்திருக்கும் முகத்திற்கு மந்திரம் அதிகம். ஒருவரைத் திட்ட வேண்டும் என்றால் கூட, லேசான புன்னகையுடன், கண்டிப்பாகத் திட்டிப் பாருங்கள். எதிராளி அரண்டு போய் விடுவதுடன் உங்களைக் கோபப்படுத்தியதற்காக மானசீகமாக மன்னிப்பும் கேட்பார். திரும்பவும் அதே போன்ற தவறுகளைச் செய்யவே மாட்டார். சாதனை வெறி உள்ளவர்களுக்கு போதும் என்ற மனோபாவம் தேவையில்லை. இவர்கள் சாதனைப் பயணத்தில் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அவர்கள் அடையும் சிகரங்களைத் தான் குறிக்கின்றன.