

முதலுதவி பற்றிய புரிதல் இல்லாமல் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி செய்யும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாகவும், முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் மகாராஷ்டிரா மாநிலம் புனேநகரில் உள்ள மருத்துவமனை ஒன்று திருநங்கைகளுக்கு பயிற்சி அளித்திருக்கிறது. முதல்கட்டமாக அங்குள்ள லோக்மயா மருத்துவமனையில் 20 திருநங்கைகள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
பொதுவாக திருநங்கைகள் தெருக்கள், போக்குவரத்து சிக்னல்களில் உலா வருவார்கள். அதனால் சாலை விபத்துகள் நேர்ந்தால் அதனை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பது, ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்ற பயிற்சிகள் திருநங்கைகளுக்கு அளிக்கப்பட்டால், அது பல உயிர்களை காப்பாற்ற உதவும் என்கிறார், திருநங்கைகள் நல ஆர்வலர் சோனல் டால்வி. இவரும் முதலுதவி பயிற்சியில் பங்கேற்றிருக் கிறார்.
இந்த பயிற்சி வகுப்பில் திருநங்கைகள் ஆர்வமாக பங்கேற்கிறார்கள். விபத்தில் சிக்கிய நபர் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதை பரிசோதிக்கவும், அவசர உதவிக்கு அழைக்கவும் இந்த பயிற்சி உதவியாக இருக்கும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவரை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும், எந்த மாதிரியான முதலுதவி சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொண்டோம் என் கிறார்கள், திருநங்கைகள். இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைத்து திருநங்கைகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரும், நிர்வாக இயக்குனருமான நரேந்திர வைத்யா கூறுகையில், "சாலை விபத்துகளில் காயமடையும் நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆபத்தான நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
முதலுதவியை சரியாக மேற்கொண்டால் இறப்பையும், கடுமையான காயங்களையும் தடுத்துவிடலாம் என்கிறார். திருநங்கைகளுக்கு மட்டுமின்றி ஐ.டி. துறையில் பணிபுரியும் ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், பஸ் டிரைவர்கள் போன்றவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள்.