சமையல் பாத்திரத்தில் சென்று திருமணம்... காதல் தம்பதியின் புது அனுபவம்

கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் சமையல் பாத்திரம் ஒன்றை படகாக பயன்படுத்தி இளம் காதல் தம்பதி ஒன்று திருமண ஹாலுக்கு சென்றுள்ளது.
சமையல் பாத்திரத்தில் சென்று திருமணம்... காதல் தம்பதியின் புது அனுபவம்
Published on

ஆலப்புழா,

கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டது.

தொடர் கனமழையால் கேரளாவில் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், நீர் நிலைகளுக்கு அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் கடந்த 16ந்தேதி ஒருவர் பலியானார். இதேபோன்று, கோட்டயம் மற்றும் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 12 பேரை காணவில்லை. எனினும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரால் சம்பவ பகுதிக்கு செல்ல முடியவில்லை.

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்று 23 ஆக உயர்ந்திருந்தது. இந்த நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை இன்று 35 ஆக உயர்ந்து உள்ளது.

அவர்களில் 22 பேர் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட இரு நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், சேற்றில் புதைந்தும் போயுள்ளன.

2 அடுக்குகள் கொண்ட வீடு ஒன்று ஆற்றில் அடியோடு விழுந்து மூழ்கியது. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து உள்ளன. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களில் பெருமளவிலானோர் குழந்தைகள் ஆவர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

கேரளாவில் மக்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், பல சிக்கல்களை கடந்து, இளம் காதல் தம்பதியின் திருமணம் ஒன்று நடந்தேறியுள்ளது. அதனை காண்போம்...

கேரளாவின் செங்கனூர் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் ஒன்றாக பணியாற்றி வருபவர்கள் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா. பணியிடத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் மாமா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால், கடந்த 5ந்தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். எனினும், இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருவரும் முடிவு செய்துள்ளனர். ஆனால், ஆகாஷ் வசித்த பகுதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களும் 15 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த ஆகாஷ் கடைசியில் தாளவாடி பகுதியில் ஒரு கோவிலை பிடித்துள்ளார். அந்த கோவிலில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த ஒப்பு கொண்டுள்ளனர். இதன்படி இன்று அவர்களது திருமணம் கோவிலில் நடைபெற முடிவானது.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என சிறிய அளவில் நிகழ்ச்சியை முடித்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. திருமண தம்பதி தங்களது எண்ணம் நிறைவேறும் மகிழ்ச்சியில் இருந்தது. ஆனால், சோதனை மழை வடிவில் வந்தது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கேரளாவில் 35 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கேரளாவில் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமடைந்து உள்ளது. பல்வேறு இடங்களை வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த சூழலில் கோவிலில் இருந்து ஆகாஷை தொடர்பு கொண்ட சிலர், மழையால் திருமணம் நடைபெறும் பகுதி வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

அதனால், திருமண நிகழ்ச்சியை தள்ளி வைக்கிறீர்களா? என கேட்டுள்ளனர். தம்பதி இருவரும் சுகாதார பணியாளர்கள். கொரோனா பணியில் உள்ளவர்கள். திருமணத்திற்கு அடுத்து எப்போது விடுமுறை கிடைக்கும் என உறுதி கூற முடியாத சூழலில் இருந்தனர்.

அதனால், திருமண நிகழ்வை தள்ளி வைக்க வேண்டாம் என இருவரும் முடிவெடுத்தனர். கோவில் நிர்வாகத்தினரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வருவதற்கான தேவையான ஏற்பாடுகளை செய்கிறோம் என கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தாளவடி வந்த தம்பதியை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர். அவர்கள் செல்ல வேண்டிய கோவிலுக்கு உரிய பெரிய அலுமினியத்தில் செய்யப்பட்ட சமையல் பாத்திரம் ஒன்று தயாராக இருந்தது. அதனை படகாக பயன்படுத்தி மணமக்கள் பயணம் செய்ய தொடங்கினர். இதனை தவிர அவர்களுக்கு வேறு எந்தவொரு வாய்ப்பும் இல்லை.

இருவரும் அதனுள் அமர்ந்து கொண்டனர். புகைப்பட கலைஞர் ஒருவரும் உடன் வந்துள்ளார். இந்த காதல் ஜோடி திருமண நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று சேர்ந்தபோது, நெருங்கிய சொந்தங்கள் சிலரும் இணைந்து கொண்டனர். கோவிலுக்கு அடுத்து இருந்த திருமண ஹாலில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், திருமணம் நடந்துள்ளது.

கேரளாவில் அணையில் நீர்மட்டம் உயர்வை பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் தம்பதியின் திருமணம் பற்றி அறிந்து, அங்கே சென்றுள்ளனர்.

கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது, வீடுகளில் சிக்கி தவித்தவர்களை மீட்பதற்கும் மற்றும் பயணம் செய்வதற்கும் இந்த சமையல் பாத்திரம் பயன்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com