செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 917 புள்ளிகள் உயர்வு - நிப்டி 272 புள்ளிகள் முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் கிடுகிடுவென ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 917 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 272 புள்ளிகள் முன்னேறியது.
செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 917 புள்ளிகள் உயர்வு - நிப்டி 272 புள்ளிகள் முன்னேற்றம்
Published on

மும்பை

நேற்றைய தினம் உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறை சார்ந்த பங்குகளில் முதலீடு அதிகரித்ததும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 11 காசுகள் உயர்ந்ததும் பங்கு வியாபாரத்திற்கு சாதகமாக அமைந்தது. மேலும், இதர ஆசிய நாடுகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இது போன்ற காரணங்களால் நேற்று இந்திய சந்தைகள் கிடுகிடு என ஏற்றம் கண்டன.

மும்பை பங்குச்சந்தையில் நேற்று நுகர்வோர் சாதனங்கள் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 3.52 சதவீதம் உயர்ந்தது. அடுத்து உலோக துறை குறியீட்டு எண் 3.29 சதவீதம் அதிகரித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 28 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 2 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் டைட்டான் கம்பெனி, ஐ.டி.சி., எச்.டீ.எப்.சி., பஜாஜ் பைனான்ஸ், டாட்டா ஸ்டீல், பவர் கிரிட், ஹீரோ மோட்டோகார்ப், மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.டீ.எப்.சி. வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத ஸ்டேட் வங்கி, மாருதி சுசுகி உள்ளிட்ட 28 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் பஜாஜ் ஆட்டோ, இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய 2 நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 917.07 புள்ளிகள் அதிகரித்து 40,789.38 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 40,818.94 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 40,117.46 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,618 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,495 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 181 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.3,136 கோடியாக உயர்ந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.1,855 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 271.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,979.65 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,986.15 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,783.40 புள்ளிகளுக்கும் சென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com