உலக இளைஞர்களை வாட்டும் வேலைவாய்ப்பு, பொருளாதார நெருக்கடி

செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகள் குறைந்துவிடுமோ என்ற அச்சம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது.
உலக இளைஞர்களை வாட்டும் வேலைவாய்ப்பு, பொருளாதார நெருக்கடி
Published on: 

உலக இளைஞர்கள் வேலைவாய்ப்பு, பொருளாதார நெருக்கடி குறித்து மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர் என்று ‘தீ வால் ஸ்ட்ரீட்’ ஜர்னலின் ஆய்வு தெரிவிக்கிறது.

உயர்கல்வி படித்தாலும் நல்ல வேலை கிடைப்பதில்லை... வேலை கிடைத்தாலும் போதுமான வருமானத்தில் தனியாக வாழ முடியவில்லை... வீடு வாங்குவது எட்டாக்கனவாகி வரு கிறது... செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகள் குறைந்துவிடுமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது. இப்படி உலகம் முழுவதும் இளைஞர்களிடையே பொருளாதார கவலை ஏற்பட்டுள்ளதாக, பல்வேறு நாடுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ள சிறப்பு ஆய்வு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இதன்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பான ஒ.இ.சி.டி.யில் அங்கம் வகிக்கும் 38 நாடுகளில், 25 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் உயர்கல்வி முடித்தவர்களின் விகிதம் 2011-ம் ஆண்டு 37.5 சதவீதமாக இருந்து, 2025-ம் ஆண்டில் 49 சத வீதமாக உயர்ந்துள்ளது. தென்கொரியா (71 சதவீதம் ), இங்கிலாந்து (61 சதவீதம்), பிரான்ஸ் (56 சதவீதம்), அமெரிக்கா (53 சதவீதம்) ஆகிய நாடுகளில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும். அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் பெருகவில்லை.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்

பல வளர்ந்த நாடுகளில் இளம் பட்டதாரிகளின் வேலையின்மை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மத்திய வங்கி ஆய்வின்படி, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு கல்லூரிப் பட்டதாரிகள் பெறும் கூடுதல் வருமான பலன் பெரிய அளவில் உயரவில்லை. முன்பு "கல்லூரியில் படித்தால் நல்ல வாழ்க்கை" என்றிருந்த உத்தரவாதம் தற்போது குறைந்து வருகிறது.

இதோடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. பிரான்சில் 2022-ல் சாட்ஜிபிடி அறிமுகமான பிறகு, 20 வயதுகளில் உள்ள இளம் மென்பொருள் உருவாக்குனர்களை வேலைக்கு எடுப்பது 42 சதவீதம் குறைந்துள்ளது. ஆரம்பநிலை பணிகளில் ஏஐ ஏற்படுத்தும் மாற்றம் இளைஞர்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வாழ்க்கைச் செலவு

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு சந்தைக்கு வருகின்றனர். ஆனால், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வின்படி, வேலை பெற்ற பட்டதாரிகளில் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர சம்பள வேலையும், 4 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே அலுவலகம் சார்ந்த 'வெள்ளைச்சட்டை' வேலைகளும் கிடைக்கின்றன. இது கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான பெரிய இடைவெளியைக் காட்டுகிறது.

வேலையின்மையுடன் வீட்டு விலையும் வாடகையும் உயர்ந்து வருவது இளைஞர்களைப் பெற்றோரையே சார்ந்திருக்க வைக்கிறது. ஸ்பெயினில் 20 வயதுகளில் உள்ள 82 சதவீதம் பேரும், அமெரிக்காவில் 30 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேரும் பெற்றோருடன் வசிக்கின்றனர். அதிகப்படியான வாழ்க்கைச் செலவு காரணமாகத் தனியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மிகுந்த கவலை

இங்கிலாந்தில் இளைஞர்களின் வேலையின்மை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கல்வி, பயிற்சி அல்லது வேலையின்றி உள்ளனர். சீனாவில் போட்டி நிறைந்த வாழ்க்கையில் இருந்து விலகி, குறைந்தபட்ச முயற்சி யுடன் வாழும் "லையிங் பிளாட்" போக்கை இளைஞர்கள் பின்பற்றுகின்றனர்.

இந்த ஆய்வு மூலம் உலக இளைஞர்களின் பிரச்சினை வெறும் வேலை இல்லாதது மட்டுமல்ல. நல்ல கல்வி, நல்ல வேலை, நிலையான வருமானம், சொந்த வீடு, பொருளாதார சுதந்திரம் என்ற பல ஆண்டுகளாக இருந்த வாழ்க்கைப் பாதை இப்போது பலருக்கு கடினமாகி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கல்வி அதிகரித்துள்ளது. ஆனால் நல்ல வேலை கிடைப்பது கடினமாகியுள்ளது. வேலை கிடைத்தாலும் வீட்டு விலை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது. இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆரம்பநிலை வேலைகளில் ஏற்படுத்தும் மாற்றமும் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதன்காரணமாக உலக இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர் என்று தீ வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் ஆய்வு தெரிவிக்கிறது.

X