

வாஷிங்டன்,
அமெரிக்காவில் அடுத்த மாதம் 3ம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் செயல்பட்டு வருகிறார். அவரது பதவி காலம் 2028ம் ஆண்டு வரை உள்ளது.
இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்றம் இரு அவைகளை கொண்டதாகும். செனட் சபை, பிரதிநிதிகள் சபை என 2 அவைகளை கொண்டுள்ளது. செனட் சபைக்கு 100 பேரும், பிரதிநிதிகள் சபைக்கு 435 பேரும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ள நிலையில் ஒரு மாகாணத்திற்கு தலா 2 செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதேவேளை, பிரதிநிதிகள் சபை மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
செனட் சபை உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். அதேவேளை, செனட் சபை உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடையும்போது உடனடியாக தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் செனட் சபையில் 3ல் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைந்துள்ளதால் அந்த இடங்களுக்கும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கான தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி பதவி காலம் 4 ஆண்டுகள் என்றபோதும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் (இடைக்கால தேர்தல்) அடுத்த மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி , ஜனநாயக கட்சி போட்டியிடுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி குடியரசு கட்சியை சேர்ந்தவர் ஆவார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா, ஜோ பைடன் போன்றோர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றுகிறதோ அந்த கட்சியை நாட்டின் சட்டம், அரசின் செலவுகளுக்கு அனுமதி அளித்தல், அரசின் செயல்பாடுகளை ஆராய்தல் போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். குறிப்பாக, அரசின் செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்குவதில் நாடாளுமன்ற அனுமதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த இடைக்கால தேர்தலில் குடியரசு கட்சி அதிக இடங்களை கைப்பற்றினால் அது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பிற்கு பெரும் வெற்றியை கொடுக்கும். டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு பொதுமக்களின் ஆதரவு உள்ளது என இந்த தேர்தல் வெளிப்படுத்தும். அதேவேளை, ஜனநாயக கட்சி வெற்றிபெற்றால் டிரம்ப்பிற்கு பொதுமக்கள் ஆதரவு குறைந்துள்ளதை வெளிப்படுத்தும்.
இந்த இடைக்கால தேர்தலில் டிரம்ப்பின் குடியரசு கட்சி வெற்றிபெற்றால் அது நாடாளுமன்றத்தில் பலத்தை அதிகரிக்கும். இது போருக்கு டிரம்ப் நிர்வாகம் கேட்கும் நிதியை உடனடியாக விடுவிக்கவும் வழிவகுக்கும். அதேவேளை, ஜனநாயக கட்சி வெற்றிபெற்றால் டிரம்ப் நிர்வாகம் போர் உள்ளிட்டவற்றிற்கு செலவிடும் நிதியை கட்டுப்படுத்த முயற்சிக்கும். இது டிரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால், தேர்தலில் வெற்றிபெற இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரு கட்சிகளும் வாழ்வா? சாவா? போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அமெரிக்கா முழுவதும் இடைக்கால தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.