அன்பை பரிமாறும் காதலர் தினம்

காதலர் தினம். இந்த தினத்தை இத்தனை தித்திப்பாய் மாற்ற செய்தது எது? என்பதை பலர் யோசிப்பதே கிடையாது. காதலர் தினம் என்றாலே கொண்டாட்டம் தான். பிப்ரவரி மாதம் வந்தாலே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க செய்யும். இந்த காதலர் தினம் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தை தரும் நாள் என்றால் அது மிகையல்ல.
அன்பை பரிமாறும் காதலர் தினம்
Published on

அப்படி என்ன ஒரு வலிமை காதலர் தினத்துக்கு உண்டு என்று யோசித்தால் வரலாறு சொல்லும் கதை ஒன்றே. ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் தொடங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக கூறப்படுகிறது. கிளாடியுஸ் மிமி ஆட்சிக்காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டு பாதிரியார் வாலண்டைன் என்பவர் அரசனின் அறிவிப்பை மீறி ரகசியமாக அனைவருக்கும் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். இதனையறிந்த மன்னன் வாலண்டைனை கைது செய்ததோடு, மரண தண்டனை விதித்தார். இந்த தண்டனையை நிறைவேற்ற தேதியும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும், வாலண்டைனுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இது சிறைக்காவலருக்கு தெரியவர அஸ்டோரியஸ் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அப்போது தான் வாலண்டைன், அஸ்டோரியசுக்கு தனது காதலை வாழ்த்து அட்டை மூலம் செய்தியாக அனுப்பினார். அதன்பிறகு வாலண்டைன் மன்னன் உத்தரவுப்படி கல்லால் அடித்து கொல்லப்பட்டார். வாலண்டைன் உயிரிழந்த அந்த நாளே (கி.பி.270, பிப்ரவரி 14-ந் தேதி) காதலர் தினமாக (வாலண்டைன்ஸ் டே) என உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலர் தினம் என்பது காதலிப்பவர்கள், காதலிக்க தூதுவிட்டுக்கொண்டிருப்பவர்கள், ஒருதலையாக காதலிப்பவர்கள் என எல்லோருக்குமே குதூகலத்தை கொடுத்துவிடும். மனதுக்கு பிடித்தவருக்கு பரிசுகள் கொடுப்பது, மனதின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய நிறத்தில் உடைகள் அணிவது, வாழ்த்து அட்டைகள் பரிமாறுவது என காதலர் தினத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். தற்போது காதலர் தினத்துக்கு முந்தைய வாரமும் ஸ்பெஷல் வாரமாகி விடுகிறது. அந்த வகையில் 7-ந் தேதி ரோஸ் டே, 8-ந் தேதி பிரபோஸ் டே, 9-ந் தேதி சாக்லேட் டே, 10-ந் தேதி டெட்டி டே, 11-ந் தேதி பிராமிஸ் டே, 12-ந் தேதி கிஸ் டே, 13-ந் தேதி ஹக் டே என கொண்டாடிவிட்டு, கடைசியாக 14-ந் தேதி காதலர் தினத்தை ஆர்ப்பரிப்புடன் கொண்டாடுகிறார்கள்.

அதேவேளை காதலித்து திருமணம் செய்தவர்களும் தங்களது வாழ்க்கை துணைக்கு வாழ்த்துகள் பரிமாறவும், பரிசுகள் கொடுக்கவும் பிரயாசைப்படுவார்கள். அந்த வகையில் காதலை மீண்டும் துளிர்விட செய்யும் அந்த நிகழ்வு மிகவும் அழகானது. அதேவேளை காதலர் தினம் என்பது காதலர்களுக்கு மட்டும் இல்லை என்ற ரீதியில் பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்ட தம்பதிகளும் அந்த தினத்தில் பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி கொள்கிறார்கள். காதல் என்ற வார்த்தைக்கு அன்பு, பாசம் என்ற பல்வேறு பெயர்களும் உவமையிட்டு கூறப்படுவதால் உலகம் முழுவதும் பலதரப்பட்ட மக்களும் ஆசையுடன் கொண்டாடும் வார்த்தையாகி போனது. எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் காதலர் தினம் என்பது உலகமெங்கும் எதிர்பார்ப்புடன் கொண்டாடும் ஒரு உற்சாக கொண்டாட்டத்தின் கூக்குரலாகவே இருந்து வருகிறது.

அதனால்தான் டென்மார்க் போன்ற நாடுகளில் காதலர் தினம் தேசிய நாளாக கருதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. பிரான்சில் காதலர் தினத்தை 90 நாட்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். சீனா, பிரான்ஸ், வேல்ஸ் போன்ற நாடுகள் காதலர் தினத்தை ஜனவரி 25-ந் தேதி கொண்டாடுகின்றன. இங்கிலாந்தில் காதலர் தினத்தில் கன்னிப்பெண்கள் தலையணைக்கு அடியில் பிரியாணி இலையை வைத்து உறங்குகிறார்கள். அப்படி உறங்கினால் தங்களது எதிர்பார்ப்புக்கேற்ப கணவர் அமைவார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இத்தாலியில் காதலர் தினத்தன்று காலையில் முதலில் கண்விழிக்கும் நபரை போலவே கணவர் அமைவார் என்பது அந்நாட்டு பெண்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இப்படி உலக நாடுகள் முழுவதிலும் காதலர் தினம் அந்தந்த வழக்கத்துக்கு ஏற்றவாறு வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.

என் இதயம் அவளிடத்திலும், அவள் இதயம் என்னிடத்திலும் ஆரோக்கியமாக துடிக்கின்றதா? என்று உறுதி செய்யும் வருடாந்திர பரிசோதனை தினமாக வருவதே காதலர் தினம் என்ற புதுக்கவிதையின் வரிகளே காதலின் ஆழத்துக்கு சான்று. ஆனால் நானும் காதலிக்கிறேன் என்று பெயருக்கு சுற்றி பள்ளி பருவத்தில் காதல் சேட்டைகளில் ஈடுபடுவது நிச்சயம் ஏற்கமுடியாதது தான். உண்மையான காதல் என்பது சமூகம் ஏற்கும் சூழலில் உருவாவதே நன்று. அந்த காதல் வெற்றிப்படிகளில் ஏறிச்செல்ல முழுமையான அன்பும், நம்பிக்கையுமே மிகப்பெரிய தேவையாக இருக்ககிறது. எது எப்படி இருந்தாலும் மனதின் அடி ஆழத்தில் இருந்து உற்சாகத்துடன் கூடிய அன்பு மீண்டும் துளிர்விட காரணமாக அமையும் காதலர் தினம் வரவேற்புக்குரியதே... அந்த காதலர் தினத்தின் மாண்பை காப்பாற்றும் வகையில் கொண்டாடக்கூடிய எந்த நிகழ்வும் மகிழ்ச்சிக்குரியதே... இந்த காதலர் தினத்தில் நமது பெற்றோர், குடும்ப உறவுகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைவரிடமும் அன்பு பரிமாறுவோம். காதலர் தினத்தை கொண்டாடுவோம்.

காதலர் தினத்தில் அணியும் உடைகளின் நிறங்கள்

பொதுவாகவே காதலர் தினத்தில் அணிய வேண்டிய உடைகளின் நிறங்களுக்கு ஏற்ப சில குறிப்புகளும் சொல்லப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-

பச்சை - எனக்கு விருப்பம் உங்கள் முடிவுக்கு காத்திருக்கிறேன்

ரோஸ் - இப்போதுதான் காதலை ஏற்றேன்

நீலம் - இன்னும் பிரீயாகத்தான் இருக்கிறேன்

மஞ்சள் - காதல் தோல்வி

கறுப்பு - காதல் நிராகரிக்கப்பட்டது

ஆரஞ்சு - நிச்சயதார்த்தம் செய்ய ரெடி

சிவப்பு - காதலுக்கு எதிர்ப்பு

கிரே - காதலில் விருப்பம் இல்லை

வெள்ளை - ஏற்கனவே காதலிக்கிறேன்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com