

மகாராஷ்டிரா மாநிலம் கான்டிவல்லி பகுதியில் உள்ள ஆலையில் 15 லட்சமாவது வாகனம் மிகுந்த ஆரவாரத்துக்கிடையே கம்பீரமாக வெளிவந்தது. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிக்-அப் டிரக் வாகன பிரிவில் முன்னிலை வகிக்கிறது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா.
இந்நிறுவனத்தின் பிக்- அப் டிரக் வாகன பிரிவில் 4 மாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. அதிலும் குறிப்பாக பொலேரோ மாடல் இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் பிரபலம். இப்பிரிவில் பொலேரோ, பொலேரோ மாக்ஸி டிரக், பொலேரோ கேம்பர் மற்றும் இம்பீரியோ என்ற பெயரில் வாகனங்கள் மிகவும் பிரபலமாக விளங்குகின்றன.
இதில் பொலேரோ 1,700 கிலோ எடையை இழுக்கும் திறன் கொண்டது. 9 அடி அளவுக்கு சரக்குகளை வைக்கும் தளம், 52.2 கிலோவாட் ஆற்றல் (70 பி.ஹெச்.பி.) கொண்டது.
இதில் மற்றொரு மாடலான பொலேரோ மேக்ஸி டிரக் பிளஸ் மாடல் 63 பி.ஹெச்.பி. திறன் கொண்டது. 195 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது.
இதேபோல பொலேரோ கேம்பர் மாடல் இரட்டை கேபினைக் கொண்ட பிக்-அப் வாகனமாகும். இரண்டு விதமான பயன்பாடுகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாகத் திகழ்கிறது. இம்பீரியோ மாடல் 75 பி.ஹெச்.பி. திறன் கொண்டது. 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. டி.ஐ. என்ஜின் கொண்ட இந்த வாகனம் எரிபொருள் ஸ்மார்ட் தொழில்நுட்பம் கொண்டது.
சரக்குப் போக்குவரத்தில் மஹிந்திரா வாகனங்கள் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளன. வேளாண் துறை, பால் வினியோகம், நுகர்பொருள், கட்டுமான இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வதில் இந்நிறுவனத் தயாரிப்புகள் மிகவும் உபயோகமானவையாகத் திகழ் கின்றன. நவீன தொழில்நுட்பத்தை தனது வாகனங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாலேயே மஹிந்திரா தயாரிப்புகளுக்கு சந்தையில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.