

டாடா நெக்சான் மாடல் 2018-ம் ஆண்டில் அறிமுகமானது. தற்போது அறிமுகமாகியுள்ள கிராஸ் மற்றும் கிராஸ் பிளஸ் விலை சுமார் ரூ.7.5 லட்சம் முதல் ரூ. 8.18 லட்சம் வரை பெட்ரோல் மாடலும், டீசல் மாடல் சுமார் ரூ.8.48 லட்சம் முதல் ரூ.9.18 லட்சம் வரையிலும் கிடைக்கும்.
நெக்சான் கிராஸ் மாடலை தற்போது இரண்டாவது முறையாக இந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது. முந்தைய ஸ்பெஷல் எடிஷன் மாடல் 2018-ல் எலுமிச்சை பச்சை நிறத்தில் வெளிவந்தது. ஏற்கனவே விற்பனையில் உள்ள நெக்சான் எக்ஸ்.எம். மற்றும் எக்ஸ்.டி டிரிம்ஸ் ஆகிய மாடலைவிட வித்தியாசமானதாக ஸ்பெஷல் எடிஷன் கார்கள் வந்துள்ளன. இதில் டியூயல் டோன் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
சில்வர் நிற மேல்கூரை, ரியர் வியூ மிரர், அலாய் சக்கரம், முன்புற கிரிட் ஆகியன வித்தியாசமாக உள்ளன. உள்புறத்திலும் ஆரசுநிற இருக்கை, ஏ.சி. வென்ட், டேஷ் போர்டு ஆகியன உள்ளன. இதேபோல கிராஸ் பிளஸ் மாடலிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தோற்றங்களில் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் என்ஜின் செயல் திறனில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 110 ஹெச்.பி. திறன் 1.2 லிட்டர் என்ஜின் ஆகியவற்றுடன் 6 கியர்களைக் கொண்டதாகவும், ஆட்டோமேடிக் கியர் வசதியோடு இது கிடைக்கிறது. டாடா நெக்சான் மட்டுமே விபத்து சோதனையில் 5 நட்சத்திரக் குறியீடு பெற்ற வாகனமாகும்.
இப்பிரிவில் ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்.யு.வி 300, போர்டு எகோ ஸ்போர்ட், மாருதி சுஸுகி பிரீஸா ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.