காய்கறியும்.. மீன் வளர்ப்பும்.. விவசாய ஆலோசகரின் புதுமை பண்ணை

விவசாய ஆலோசகரான விஜயகுமார் நாராயணன் மிகக் குறைந்த வளங்களைப் பயன்படுத்தி மீன் வளர்ப்புடன், காய்கறி சாகுபடியும் செய்து அக்வாபோனிக்ஸ் முறையில் வெற்றிபெற்றுள்ளார்.
காய்கறியும்.. மீன் வளர்ப்பும்.. விவசாய ஆலோசகரின் புதுமை பண்ணை
Published on

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவர், கடந்த இருபது ஆண்டுகளாக அரபு நாடான மஸ்கட்டில் பல்வேறு பணிகளில் இருந்தார். பின்னர், அங்கிருந்து ஊர் திரும்பி இருக்கிறார். மீண்டும் வெளிநாடு செல்ல மனமில்லாமல் இங்கு ஏதாவதொரு வேலை செய்ய தீர்மானித்திருக்கிறார். என்ன வேலை செய்வது என்பதில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

நீண்ட யோசனைக்கு பிறகு நன்னியோட்டில் உள்ள தனது பூர்வீக வீட்டில் விவசாயம் செய்ய முடிவெடுத்திருக்கிறார். கேரளாவின் தட்பவெப்ப நிலைக்கேற்ப புதிய விவசாய நுட்பங்கள் மற்றும் பயிர்கள் பற்றிய புத்தகங்களைப் படித்து தகவல்களை திரட்டினார்.

கணிதப் பட்டதாரியான விஜயகுமார், இறுதியில் அக்வாபோனிக்ஸ் வேளாண் முறையை தேர்ந்தெடுத்தார். மீன் வளர்ப்பு மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கியதாக இம்முறை இருந்தது. மீன் கழிவுகளில் உள்ளடங்கி இருக்கும் ஊட்டச்சத்துகள் தாவரங்களுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை வளப்படுத்துகின்றன.

"மஸ்கட்டில் பணிபுரியும்போது, மண்ணை பயன்படுத்தாமல் விவசாயம் செய்யும் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய வகுப்புகளில் கலந்து கொண்டேன். இதேபோன்றதுதான் அக்வாபோனிக்ஸ் முறையும். ஆனால், இது ஆர்கானிக் வகையை சேர்ந்தது. மீன் வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானமும் பெறமுடியும்" என்கிறார் 52 வயதான விஜயகுமார்.

கடந்த 2012-ம் ஆண்டு பருவமழையின்போது விஜயகுமாரின் வீட்டு முற்றத்தில் இருந்த பெரிய மரம் முறிந்துவிழுந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது. மழைநீர் நிரம்பியதால், குழியை மீன் வளர்ப்பு தொட்டியாகப் பயன்படுத்த முடிவெடுத்தார். இன்று அவரது மீன் தொட்டியில் திலேப்பியா, கெண்டை மற்றும் சிறிய நண்டுகள் உள்ளன.

"நான் மீன்களுக்கு அரிசி தவிடு, தேங்காய் மற்றும் நிலக்கடலை கேக் போன்ற இயற்கை தீவனங்களை தருகிறேன். அவை ஒப்பீட்டளவில் மலிவானவை மற்றும் இயற்கையானவை" என்கிறார். தொட்டியைச் சுற்றிலும் புரோக்கோலி, கீரை, புதினா, தக்காளி, கறிவேப்பிலை, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளைப் பயிரிடுகிறார். மேலும் குறைந்த நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பதற்கும் ஆலோசனை கூறுகிறார்.

"அக்வாபோனிக்ஸ் பண்ணையை ஒன்றிணைக்க 2 சென்ட் நிலம் தேவைப்படும். ஒரு சென்ட் மீன் வளர்ப்புக்கும், மீதியை காய்கறி பயிர்களுக்காகவும் பயன்படுத்தலாம். அத்தகைய தொட்டியில் இரண்டு டன் மீன்களை வளர்க்கலாம்.

திலேப்பியா சிறந்த தேர்வாகும். அதேவேளையில் சாதாரண விவசாயத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்பதால் இதைப் பற்றி முறையான பயிற்சி பெறாமல் ஒருபோதும் இந்த விவசாயத்தில் இறங்கக் கூடாது" என்றும் கூறுகிறார் விஜயகுமார்.

அக்வாபோனிக்ஸ் விவசாயம் மூலம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பாதிக்கிறார். பரப்பளவு மற்றும் முதலீட்டின் அடிப்படையில் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் நம்பிக்கையூட்டுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com