வேங்கை மரம்

இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாக கொண்ட மரம் வேங்கை. இம்மரம் இந்தியாவின் கேரள-கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், இலங்கையிலும் காணப்படுகிறது.
வேங்கை மரம்
Published on

இந்த மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இதன் இலைகள் ஐந்து கூட்டு இலைகளைக் கொண்ட கொத்தாக இருக்கும். இலைநுனி வளைந்திருக்கும். மரத்தின் பால் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

வேங்கை மரத்தின் இலைகள், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பல ஆண்டு காலமாக ஆயுர்வேத மருத்துவத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேங்கை மரத்தில் உள்ள வைரம் காயங்களை மூடவும், நீரிழிவு நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிப்பால் என்ற தேசிய வனப்பகுதியில் வாழும் கொல் இனத்தினர் வேங்கை மரப்பட்டையை வேறு சில மரங்களின் பட்டைகளுடன் அரைத்துப் பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். கர்நாடக மக்கள் வேங்கை மர வைரத்தால் ஒரு வகையான கண்ணாடி செய்து அதனை நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். கணையத்தில் இருந்து இன்சுலினை மீளச் சுரக்கச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும். பொருளாதார அடிப்படையில் குறிப்பிட்ட சில மரங்களுக்கான சந்தை மதிப்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் தேக்கு, செஞ்சந்தனம் ஆகியவற்றுக்கு அடுத்து மதிப்புள்ள மரமாக வேங்கை கருதப்படுகிறது.

தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் முதன்மையானது இந்த வேங்கை. கோவில்களில் தல விருட்சமாக வேங்கை மரங்களே அதிகம் இருக்கும். வேங்கை மரம் பற்றி அமையப்பெற்றுள்ள தேவாரப் பாடல் ஒன்று வேங்கை மரம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை நமக்கு விளக்குகிறது. தோல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதிலும் வேங்கை மரப்பட்டை நன்கு செயல்புரிகிறது. வேங்கை மரம் சுற்றுச்சூழலில் வெப்பத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பேருதவி புரிகிறது. கொளுத்தும் கோடையிலும் பூமியின் வெக்கையை உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியைத் தரும் விசேஷ குணத்தை இயற்கை இந்த மரத்திற்கு அளித்துள்ளது.

இதுமட்டுமின்றி வீட்டு உபயோக மரப்பொருட்களான கட்டில், நாற்காலி, மேசை போன்றவற்றை தயாரிப்பதற்கு வேங்கை மரங்கள் பயன்படுகின்றன. 10 ஆண்டுகளில் 15 அடி உயரம், 3 அடி சுற்றளவு என்று இந்த மரங்கள் வளர்கின்றன. வேங்கையைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம்.

விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கனிசமான வருவாயை இம்மரங்கள் ஈட்டித்தரும். மேலும், வீட்டின் முன்பும் குடியிருப்பு பகுதிகளிலும் நடுவதால் குளிர்ச்சியான சூழலைப் பெறமுடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com