பிப்ரவரி மாதத்தில் 51 சதவீதம் வளர்ச்சி: துணிகர-தனியார் பங்கு முதலீடு 260 கோடி டாலராக அதிகரிப்பு

பிப்ரவரி மாதத்தில் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு 51 சதவீதம் வளர்ச்சி கண்டு 260 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் 51 சதவீதம் வளர்ச்சி: துணிகர-தனியார் பங்கு முதலீடு 260 கோடி டாலராக அதிகரிப்பு
Published on

ஆலோசனை சேவை

தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. அத்துடன் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவையும் வழங்குகின்றன. இவ்வகை முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.

தனியார் பங்கு முதலீட்டின் ஒரு பிரிவாக துணிகர முதலீடு இருக்கிறது. இந்த முதலீட்டாளர்கள் புதிய மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். வளர்ந்து வரும் நிறுவனம் ஒன்றின் பங்குகளை பொதுவாக ஒரு துணிகர முதலீட்டாளர் வாங்குகிறார். அல்லது அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவராக அதிக பங்கு மூலதனம் பெற்றுக் கொள்கிறார்.

நம் நாட்டில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 260 கோடி டாலர் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 51 சதவீதம் அதிகமாகும். 61 ஒப்பந்தங்கள் வாயிலாக இந்த முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 9 பெரிய ஒப்பந்தங்கள் வாயிலாக 180 கோடி டாலர் முதலீடு வந்துள்ளது. 2018 பிப்ரவரியில் 4 மெகா ஒப்பந்தங்களால் 65.50 கோடி டாலர் ஈர்க்கப்பட்டு இருந்தது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 4 பெரிய ஒப்பந்தங்கள் மூலம் 100 கோடி டாலர் பெறப்பட்டது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சி மாற்றம் குறித்த ஐயப்பாடுகள் உள்ளதால் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கூறி வந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் முதலீடு 51 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளியேறிய முதலீடு

ஓரளவு வளர்ச்சி கண்ட பின் பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. அப்போது அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருக்கும் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பங்குகளை விற்று விட்டு நல்ல லாபத்துடன் வெளியேறுகின்றன. பிப்ரவரி மாதத்தில் இவ்வாறு 10 நடவடிக்கைகள் மூலம் வெளியேறிய முதலீடு 47.20 கோடி டாலராகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com