துணிகர-தனியார் பங்கு முதலீடு 440 கோடி டாலராக அதிகரிப்பு

நிதி ஆண்டின் முதல் மாதத்தில் துணிகர-தனியார் பங்கு முதலீடு 440 கோடி டாலராக அதிகரிப்பு
துணிகர-தனியார் பங்கு முதலீடு 440 கோடி டாலராக அதிகரிப்பு
Published on

மும்பை

நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு 440 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

அமோக வளர்ச்சி

தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. மேலும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றன. இந்த நிறுவனங்களின் முதலீட்டை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. தனியார் பங்கு முதலீட்டின் ஒரு பிரிவாக துணிகர முதலீடு இருக்கிறது. இந்த முதலீட்டாளர்கள் புதிய மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர்.

நம் நாட்டில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 440 கோடி டாலர் அளவிற்கு துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இவ்வகை முதலீடு 79 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்தில் 10 கோடி டாலருக்கு அதிக மதிப்பில் 11 ஒப்பந்தங்கள் நிறைவேறி உள்ளன. அந்த மாதத்தில் ஈர்க்கப்பட்ட மொத்த முதலீட்டில் (440 கோடி டாலர்) இந்த ஒப்பந்தங்களின் பங்கு மட்டும் 290 கோடி டாலராகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10 கோடி டாலருக்கும் அதிக மதிப்பில் நிறைவேறிய 8 ஒப்பந்தங்களால் மொத்தம் 190 கோடி டாலர் ஈர்க்கப்பட்டு இருந்தது.

துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டை ஈர்க்கும் நிறுவனங்கள் ஓரளவு வளர்ச்சி கண்ட பின் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. அப்போது அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருக்கும் துணிகர, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பங்குகளை விற்று விட்டு நல்ல லாபத்துடன் வெளியேறுகின்றன.

இந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 160 கோடி டாலர் அளவிற்கு முதலீடு விலகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்திலும் இவ்வாறு வெளியேறிய தொகை ஏறக்குறைய இதே அளவிற்குத்தான் இருந்தது.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய பங்கு வெளியீடுகள் குறைந்துள்ளது. எனவே துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டாளர்கள் தற்சமயம் பல நிறுவனங்களில் இருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் பங்கு வெளியீடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் என்பதால் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடுகளும் அதிகம் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com