மறதி நோயை குணப்படுத்தும் வயாகரா..!

வயாகரா மருந்து ரத்த நாளங்களை விரிவாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் இதய நோய்க்கான மருந்தாகத்தான் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டது.
மறதி நோயை குணப்படுத்தும் வயாகரா..!
Published on

கிலீவ்லேண்ட் ,

ஆண்மை குறைவு பிரச்னைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படும் வயாகராவை, அல்சைமர்ஸ் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் வயாகரா (சில்டெனாபில்) மருந்து இதய நோய்க்கான மருந்தாகத்தான் வடிவமைக்கப்பட்டது. இந்த மருந்து ரத்த நாளங்களை விரிவாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டது.

இந்த மருந்து இதயம் மட்டுமின்றி, ஆணுறுப்பில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதன் காரணமாக, ஆணுறுப்பு விரைப்புத்தன்மைப் பிரச்னைக்கான மருந்தாக மேம்படுத்தப்பட்டது.

மேலும், இந்த மருந்தால் வேறு சில பயன்களும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதினர். அதன் காரணமாக, சில்டெனாபில் மருந்து ஆண் மற்றும் பெண்களுக்கு பல்மொனெரி ஹைப்பர்டென்சன் எனப்படும் நுரையீரல் பிரச்சினைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இம்மருந்து அல்சைமர்ஸ் நோய்க்கும் பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் 5 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முதுமை மறதி நோயுடன் வாழ்கின்றனர், மேலும் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 கோடி பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அல்சைமர் ஏற்படுகிறது.

அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் மனித திசுக்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், இந்த மருந்தை அதிகம் உட்கொள்பவர்களின் மூளையில் செல் வளர்ச்சி அதிகரித்து புரதம் சேர்வது குறைந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 70 லட்சம் நோயாளிகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்த கிலீவ்லேன்ட் ஆராய்ச்சியாளர்கள், வயாகரா மருந்து எடுத்துக் கொள்ளும் ஆண்கள், அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிக்சியாங் செங் கூறுகையில், சில்டெனாபில் மருந்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அல்சைமர்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பது மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. மேலும் சில்டெனாபில் மருந்தால் அல்சைமர்ஸ் நோயாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.

ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் மருந்தை வேறு ஒரு தேவைக்கு பயன்படுத்துவது விரைவானது, எளிமையானது என அவர்கள் கூறினர்.புதிய மருந்தைக் கண்டுபிடிப்பது மற்றும் புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடிப்பதை விட இது விலை மலிவானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, பிரிட்டனின் எடின்பரோ பல்கலைக்ககழகத்தைச் சேர்ந்த மூளை ஆராய்ச்சி நிபுணர் தாரா ஸ்பிரேஸ் ஜோன்ஸ் தெரிவித்திருப்பதாவது, "அல்சைமர்ஸ் நோயின் அபாயத்தை சில்டெனாபில் மருந்தால் குறைக்க முடியுமா என்பதைக் கண்டறிய இன்னும் நிறைய ஆய்வுகள் தேவை" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com