

அதாவது, எத்தனை சக்தி மிக்க மருந்தாக இருந்தாலும், அவற்றின் செயல்பாட்டுக்கு எதிராக மார்தட்டி நின்றுகொண்டு, என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நோய் பரப்பும் பாக்டீரியா சொல்வதைப் போன்றது.
இது நாம் சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒரு விஷயமல்ல. ஏனெனில், இது லட்சக்கணக்கான மக்களை மிக மிக குறுகிய காலத்தில் கொன்றுவிடும் மிகவும் ஆபத்தான ஒரு மருத்துவப் பிரச்சினை. இதற்கு தீர்வுகாண பல்வேறு வகையான ஆய்வுகள் உலகளவில் தொடர்ந்து நடந்து வருகின்றன. அத்தகைய ஒரு ஆய்வு அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல் கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்ட சில வைரஸ்கள் உள்ளன. இவற்றை பயன் படுத்தி இந்த ஆய்வு நடைபெற்றது.
அந்த ஆய்வில், பாக்டீரியாக்களை கொல்லும் தன்மைகொண்ட வைரஸ்களில் ஒன்றான, பேஜ்கள் (Phages) என்ற வைரஸ்சுக்கும், பாக்டீரியாக்களுக்கும் இடையில் நிகழும் தகவல் பரிமாற்றம் குறித்த தகவல்கள் தெரியவந்தது. அதாவது, பேஜ்கள் வைரஸ், பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை புரிந்துகொண்டு, பின்னர் அதற்கேற்றார்போல் அவற்றைத் தாக்குகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமாக, பாக்டீரியாக்களின் தகவல் பரிமாற்றத்தை கேட்கும் பேஜ் வைரஸ்களின் திறனை அடிப்படையாகக்கொண்டு பாக்டீரியாக்களின் மருந்து எதிர்ப்பாற்றலை முறியடிக்க முடியும் என்கிறார் இந்த ஆய்வினை மேற்கொண்ட பிரின்ஸ்டன் பல்கலையின் ஆய்வாளர் பாணி பேஸ்லர்.
சில ரசாயன மூலக்கூறுகளை வெளியிடுவதன் மூலமாக பாக்டீரியாக்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாற்றம் செய்கின்றன என்பது ஏற்கனவே தெரிந்த செய்திதான். ஆனால், VP882 என்கிற வைரஸ் பாக்டீரியாக்களின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக்கேட்கும் திறன்கொண்டது என்பது இந்த புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாக்டீரியாக்களின் தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில், எப்போது நிறைய பாக்டீரியாக்கள் ஒரு இடத்தில் கூடும் என்பதையும், அப்போது அவற்றைத் தாக்கலாம் என்பதையும் VP882 வைரஸ்கள் முடிவு செய்கின்றன என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தாக்குதலுக்கு தயாராக வேண்டி தங்களின் எண்ணிக்கையை இருமடங்காகவும் வைரஸ்கள் ஆக்குகின்றன என்கிறது இந்த புதிய ஆய்வு.
ஒருவேளை வைரஸ்கள் தாக்கும் அளவுக்கு போதுமான எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் இல்லாமல் போனால் VP882 வைரஸ்களும் அவற்றின் சகாக்களும் தாக்குதலுக்கு பின் இறந்து போகின்றன என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், VP882 வைரஸ்கள் போல இன்னபிற வைரஸ்களும் பாக்டீரியாக்களின் தகவல் பரிமாற்றத்தை ஒட்டுக்கேட்கின்றன என்று தங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் ஆய்வாளர் பாணி பேஸ்லர்.
சொல்லப்போனால், வைரஸ்-பாக்டீரியா போன்ற இருவேறு உயிரிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக்கேட்கப் படுவது கண்டறியப்படுவது உலகத்தில் இதுவே முதல் முறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாக்டீரியாக்களின் தகவல் பரிமாற்றங்களை VP882 வைரஸ்கள் ஒட்டுக்கேட்கின்றன என்பதைக் கண்டறிந்த உடனேயே, முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஜஸ்டின் சில்பே, தங்களின் தகவல் பரிமாற்றத்தின்போது பாக்டீரியாக்கள் வெளியிடும் ரசாயன மூலக்கூறுகள் மட்டுமல்லாமல், பாக்டீரியாக்களால் வெளியிடப்படக்கூடிய எந்தவொரு மூலக்கூறைக் கண்டாலும் உடனே பாக்டீரியாக்களை தாக்கும் வண்ணம் VP882 வைரஸ்களை மரபணு மாற்றம் செய்தார்.
இதனுடன் சேர்த்து, பல்வேறு வகையான பாக்டீரியாக்களை தாக்கக்கூடிய VP882 வைரஸ்களின் விசேஷ திறனும் சேர்ந்துகொள்ளவே, காலரா, சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலை ஆகிய மூன்று வெவ்வேறு வகையான பாக்டீரியாக்களை VP882 வைரஸ்களால் தாக்கமுடியும் என்பது சில்பேவின் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பேஜ் வைரஸ்களைப் பயன் படுத்தி சில வகையான பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும் என்பது இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, VP882 வைரஸ் கட்டளையின் கீழ் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க முடியும் என்பது இந்த ஆய்வு மூலமாக உலகில் முதல் முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், உலகை அச்சுறுத்திக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கோடிக் கணக்கான மக்களை ஒரே சமயத்தில் துடைத்து எறிந்துவிடக் கூடிய ஆபத்தான பாக்டீரியாக்களின் மருந்து எதிர்ப்பாற்றலை இந்த வகையான பேஜ் கொலை யாளிகளைக் கொண்டு முறியடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில், பகையாளியை உறவாடிக் கெடுப்பது பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், VP882 போன்ற பேஜ் வைரஸ்கள் பகையாளிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக்கேட்டு அவற்றை கொல்கின்றன என்கிறது இந்த பிரின்ஸ்டன் பல்கலையின் சமீபத்திய ஆய்வு.