

* `பறவைகளின் அரசன்' என்று அழைக்கப்படும் கழுகுகள், உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றன. கழுகுகளில், மொத்தம் 74 இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றில் 60 இனங்கள் ஆப்பிரிக்க பகுதிகளில்தான் காணப்படுகின்றன.
* பறவை இனத்திலேயே நீண்ட ஆயுளைக் கொண்டது கழுகு மட்டும்தான், சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
* பறவை இனத்தில், அதிக உயரத்தில் பறக்கும் சக்தி படைத்தவையும், கழுகுகள்தான். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நிலத்தில் உள்ள உயிரினங்களை தெளிவாக பார்க்கும், கண் பார்வைத் திறன் இவற்றுக்கு உண்டு.
* எலி, கோழி, மீன், முயல், பாம்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் மாமிச உண்ணியாக கழுகுகள் இருக்கின்றன.
* கழுகுகளுக்கு புயல் மிகவும் பிடிக்கும். புயல் காற்று வீசும்போது, அவை மேகங் களுக்கு மேலாக எளிதில் பறக்கும். அதே நேரம் அவை சிறகுகளை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றன.
* மற்ற உயிரினங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில்தான், கழுகுகள் கூடு கட்டும். மிக உயரமான கூரிய முட்களை கொண்ட மரக்கிளைகள், பாறைப் பிளவுகள்தான் இவற்றின் வசிப்பிடமாக இருக்கும். இடம் தேர்வானதும் ஆண் கழுகு, முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்கள், வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு தங்களுடைய கூடுகளை வடிவமைக்கும்.
* பெண் கழுகுதான் ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கிறது. அது தன்னுடைய இணையை தேர்வு செய்வதில் பலபரீட்சையே வைக்கிறது. பல அடி உயரத்திற்கு ஆண் கழுகை அழைத்துச் செல்லும் பெண் கழுகு, அங்கிருந்து ஒரு குச்சியை தூக்கி வீசும். அந்தக் குச்சி தரையில் விழுவதற்கு முன்பாக, ஆண் கழுகு அதை பற்றிக்கொண்டு வந்து பெண் கழுகிடம் கொடுக்க வேண்டும். இந்த பரீட்சை ஒரு முறையோடு நின்று விடுவதில்லை என்பதுதான், ஆண் கழுகளுக்கு ஏற்படும் சோதனை.
* பெண் கழுகானது இனப்பெருக்கத்தில் இரண்டு முட்டைகள் இடும். அதில் முதலில் வெளிப்படும் குஞ்சானது, பெரும்பாலும் இரண்டாவதாக வெளிப்படும் குஞ்சை கொத்திக் கொன்றுவிடும். இப்படி ஆதிக்கம் செலுத்தும் முதல் குஞ்சு பெரும்பாலும் பெண்ணாகவே இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆணை விட பெண் கழுகுகள், பார்க்க பெரியதாக தோற்றம் அளிக்கும்.