தேடிக் கொண்டே தொலைந்து போகிறோம்

விஞ்ஞான பூதத்துக்கு பசி என்று வந்து விட்டால் அது எதையும் விட்டு வைப்பது இல்லை. நமக்குத் தெரிந்தும் சில சமயம் நமக்குத் தெரியாமலும் அந்த பூதம் எதை எதையோ விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல் நமக்கு முன்பாய் வந்து கைகட்டி நிற்கிறது.
தேடிக் கொண்டே தொலைந்து போகிறோம்
Published on

வாழ்க்கையில் நாம் சந்தோஷமாகவும், வசதியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக நம்முடைய பழைய சந்தோஷங்களை ஒவ்வொன்றாய் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை.

இருபது வருடங்களுக்கு முன்பு நான் ஒரு தனியார் கம்பெனி கார் ஒன்றை வாங்கினேன். மூன்று மாதங்களுக்கு முன்பு என் மகன்கள் சொன்னதால் 20 வருடமாய் ஓடிக் கொண்டிருந்த காரை எக்சேஞ்ச் கொடுத்து ஒரு புதுக்கார் வாங்க நினைத்து கார்களை விற்பனை செய்யும் கம்பெனிக்கு சென்று மானேஜரைப் பார்த்தேன். அந்த கம்பெனி மானேஜர் என்னுடைய கதைகளைப் படிக்கும் வாசகர் என்பதால் ஆர்வமாய் வரவேற்று அன்புடன் பேசினார்.

சார்... நீங்க புதுக்கார் வாங்குங்க... நான் வேண்டாம்ன்னு சொல்லலை. ஆனா உங்க பழைய காரை கொடுக்காதீங்க. நீங்களே யூஸ் பண்ணுங்க.

ஏன்?

அது மாதிரியான கார் இனிமேல் கிடைக்காது சார்... ஸ்டீல் பாடி. சூப்பரான என்ஜின். இன்னும் ஒரு பதினஞ்சு வருஷம் அந்த வண்டியை ஓட்டலாம். அதை வெச்சுக்குங்க. யாருக்கும் விக்கவும் வேண்டாம். எக்சேஞ்சும் பண்ணிக்க வேண்டாம்...

என்ன தம்பி இப்படி சொல்றீங்க... வண்டியை 20 வருடம் ஓட்டியாச்சு. என்ன இருந்தாலும் பழசு பழசுதானே?

பழசுதான் சார்... தங்கம் பழசாய் இருந்தாலும் உடனே என்ன விலை கிடைச்சாலும் பரவாயில்லைன்னு சொல்லி வித்துடுவீங்களா...?

அது எப்படி விற்க முடியும்... தங்கம் வேற கார் வேற...

விலையில் வேணும்ன்னா மாறுபடலாம் சார். ஆனா மதிப்பில் ரெண்டும் ஒண்ணுதான். உங்க காரை எக்சேஞ்சுக்கு கொடுத்தா கம்பெனி ரூல்ஸ்படி ஒரு கம்மியான ரேட்டை பிக்ஸ் பண்ணுவாங்க. ஒரு வாரம் வெயிட் பண்ணீங்கன்னா உங்க காரை வெளி நபர் யார்க்காவது நல்ல விலைக்கு வித்து தர்றேன். அப்படி இல்லேன்னா இந்தக் காரை நானே ஒரு நல்ல விலைக்கு வாங்கிக்கிறேன்.

நான் நம்பிக்கை இல்லாமல் தலையை ஆட்டிவிட்டு வந்தேன்.

ஆனால் என்ன ஆச்சரியம், அடுத்த வாரத்திலேயே 20 வருட காலமாய் நான் உபயோகித்து வந்த காரை நான் நினைத்தே பார்த்திராத விலைக்கு வெளி நபர் ஒருவர் வாங்கிக் கொண்டார். ஒரு புதுகாரை வாங்கியது போன்ற ஒரு பிரகாசம் அவருடைய முகத்தில் தெரிந்தது.

அப்போதுதான் நான் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டேன். ஓல்ட் இஸ் கோல்ட் என்று சொல்லப்பட்ட ஒரு வாக்கியம் அதனுடைய எதுகை மோனைக்காக சொல்லப்பட்ட அலங்கார வாக்கியம் அல்ல, ஒரு அர்த்த புஷ்டியான அருமையான வாக்கியம்.

பழைய சாமான்களை, பழைய புடவைகளை வாங்க வருகிற ஒரு வியாபார நபர் கூட இருபது வருடங்களுக்கு முந்தின பட்டுப்புடவை இருக்கிறதா என்றுதான் கேட்கிறார். காரணம் கேட்டால் அதில்தான் உண்மையான தங்க ஜரிகை நம்பகத் தன்மையோடு இருக்கும் என்று சொல்கிறார்.

பட்டுப்புடவை மட்டுமல்ல பழைய பொருள் எதுவாக இருந்தாலும் சரி, அது ஒரு மதிப்பான கண்ணோட்டத்தோடு பார்க்கப்படுகிறது. பழைய லண்டன் மேக் கெடிகாரம், தேக்கு, ஈட்டி, பில்ல மருது போன்ற மரங்களால் இழைத்து செய்யப்பட்ட மேஜை, நாற்காலி, கதவுகள், ஜன்னல்கள், கண்ணாடி ஜாடிகள், தரை விரிப்புகள் என்று ஒரு பெரிய பட்டியலிட்டு சொல்லிக் கொண்டே போகலாம்.

இதைத் தவிர இன்னொரு பட்டியலும் இருக்கிறது. பழைய திரைப்படங்கள், பழைய திரைப்படப் பாடல்கள், பாட்டியின் மருத்துவம், அம்மாவின் சமையல் பக்குவம், தாத்தா சொன்ன கதைகள், புகைவண்டியில் பயணம் செய்து, கிராமத்து ரெயில்வே ஸ்டேஷனின் செம்மண் பரப்பிய பிளாட்பாரத்தில் இறங்கி, நெல், சோள மணத்தோடு வயல்வெளிகளை குதிரை வண்டிப் பயணத்தில் கடந்து உண்மையான பாசம் மிக்க உறவுகளை சந்தித்துப் பேசி மகிழ்ந்த நாட்கள்.

நான் மேற்சொன்ன எதுவுமே இனிமேல் நம் வாழ்க்கையில் எட்டிக்கூட பார்க்கப்போவதில்லை ஆனால்... அடுத்த சில வருடங்களுக்குள்ளாகவே நம்மை விட்டு விலகிப் போய்விடுமோ என்கிற ஒரு விஷயத்தைப் பற்றி நாம் கவலைப்பட்டே ஆக வேண்டும்.

அது என்னவென்று கேட்கிறீர்களா?

அதுதான் நம் வாசிப்புப் பழக்கம்.

25 வருடங்களுக்கு முன்பு கோவையில் எனக்குத் தெரிந்தவரையில் நான்கைந்து தெருக்களுக்கு ஒரு நூலகம் இருந்தது. தியாகராயர் படிப்பகம், ஜீவா படிப்பகம், பாரதி படிப்பகம், வள்ளுவர் வாசக சாலை, மன மகிழ் நூலகம், வாசகர் பூங்கா என்று பல்வேறு பெயர்களில் புத்தகப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பல நூலகங்கள் வெற்றிகரமாய் செயல்பட்டு வந்தது. இந்த நூலகங்களுக்கு நானும் சென்றிருக்கிறேன். எந்த வேளையில் சென்றாலும் ஒரு நாற்காலி கூட காலியாய் இருக்காது. நூலக நேரம் முடிந்து விட்டாலும் கூட படிக்கும் வாசகர்கள் எழுந்து போக மனமின்றி படித்துக் கொண்டே இருப்பார்கள்.

இது தவிர அன்றைக்கு வந்து கொண்டிருந்த நாளிதழ்களும், வார இதழ்களும் கட்டவிழ்ந்த வேகத்திலேயே சுடச் சுட விற்று தீர்ந்தன. எந்த ஒரு புது பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டாலும் வாசகர்கள் வரவேற்பு கொடுத்தார்கள். எழுத்தாளர்களைக் கொண்டாடினார்கள். அவர்கள் எழுதிய தொடர்கதைகளை பத்திரமாக எடுத்து வைத்து காலிகோ பைண்ட் செய்து வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துப் படித்தார்கள். அதைப் பற்றிய விமர்சனங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஆனால் கடந்த சில வருடங்களாக நிலைமை சிறிது சிறிதாய் மாறி வருகிறது. பல வார இதழ்களும், நாளிதழ்களும் காலப் போக்கில் காணாமல் போயின. தரமும், வலிமையும் கொண்ட பத்திரிகைகள் மட்டும் தாக்குப் பிடித்து வாசர்களின் கைகளில் தவழ்ந்தன. மற்றவை விஞ்ஞானப் பசிக்கு இரையாயின.

முகநூல் என்றைக்கு செல்போன்களில் எட்டிப் பார்த்ததோ அன்றைக்கே வாசிப்புப் பழக்கம் செல்லரிக்க ஆரம்பித்துவிட்டது. ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு மூலமாக செல்போனின் வயிறுகளை நிரப்பி வைத்துக் கொண்டு, தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும், கழிவறைகளில் இருக்கும் போதும் கூட செல்போன்களைத் தடவி கண்ட கண்ட குப்பைகளைப் படிக்க ஆரம்பித்தார்கள். பெட்டிக் கடைகளிலும், ரெயில், பஸ் நிலையங்களில் உள்ள புத்தக ஸ்டால்களிலும் கூட சொற்பமாகவே புத்தகங்கள் விற்றன.

இன்றைய ஆண்ட்ராய்டு போன்களில் மின் புத்தகங்கள் தொட்ட வினாடியே படிக்கக் கிடைத்தாலும், புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி காகித வாசனையோடு படிக்கக்கூடிய மகிழ்ச்சி மின் புத்தகங்களில் கிடைப்பதில்லை என்கிற எண்ணத்தோடு முப்பது சதவீத வாசகர்கள் இன்னமும் இருக்கின்ற காரணத்தால்தான் வெள்ளைத் தாள்களில் எழுத்துகள் இன்னமும் பிரசவித்துக் கொண்டு இருக்கின்றன.

இந்த முப்பது சதவீதம் சிறிது சிறிதாக உயர்ந்து 40, 50, 60, 70 என்ற எண்களைத் தாண்டும்போதுதான் 1990-களில் நாம் அனுபவித்த வாசிக்கும் பழக்கம் என்கிற பொற்காலம் நமக்குக் கிடைக்கும்.

அதற்கான நம்பிக்கையும் இப்போது தெரிய ஆரம்பித்து விட்டது. காரணம் இன்றைய மக்கள் பாஸ்ட்புட் என்னும் கலாசாரத்திலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு ஆர்கானிக் உணவு முறைக்கு மாற ஆரம்பித்து விட்டார்கள். சோளம், கம்பு, ராகி, குதிரைவாலி, மரச்செக்கு நல்லெண்ணெய், பனங்கருப்பட்டி போன்ற அயிட்டங்கள் இப்போது அவர்களுடைய ஷாப்பிங் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டன. அதே போல் இப்போதைய விஞ்ஞான நுட்பத்தோடு எவ்வளவு பெரிய பிரமாண்டமான படங்கள் வந்தாலும் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்ட பழைய தமிழ்ப்படங்களான கர்ணன், அடிமைப்பெண், வசந்த மாளிகை போன்ற படங்களை தியேட்டருக்கே வந்து பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சென்ற வருடம் நான் துபாய், சிங்கப்பூர் சென்றிருந்த போது மெட்ரோ ரெயில் பயணங்களில் வித்தியாசமான காட்சியைப் பார்க்க நேர்ந்தது. கம்பார்ட்மெண்ட்டில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளில் 90 சதவீதம் பேர் புத்தகம் படித்துக் கொண்டிருக்க, சொற்பமாக சில பேர் மட்டுமே செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

என்னுடன் வந்த நண்பரிடம் அந்தக் காட்சியை நான் காட்டி ஆச்சரியப்பட அவர் சிரித்தார்.

ராஜேஷ்குமார்! ஆண்ட்ராய்டு செல்போன்கள் வந்த புதிதில் இங்கேயும் சதா சர்வ நேரமும் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். போனிலே புத்தகம் வாசித்தார்கள். ஆடியோ புக்கை பயன்படுத்தினார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. இங்கே இருக்கின்ற மக்கள் செல்போனை பேசுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

புத்தக விற்பனை இப்போது இங்கே கொடி கட்டிப் பறக்கிறது. பக்கங்களைப் புரட்டி வாசிப்பதில் கிடைக்கும் சுகம் அதிகப்படியான வெளிச்சத்தில் படிக்கும் மின் புத்தகங்களில் கிடைப்பது இல்லை என்பது இங்குள்ள மக்களின் கருத்து

நான் கசப்பாய் புன்முறுவல் பூத்தேன்.

இங்கே இருப்பவர்கள் புரிந்து கொண்டார்கள். நாம் புரிந்து கொள்வது எப்போது?

நண்பர் பலமாய் சிரித்தார்.

எதற்கும் ஒரு நாள் உண்டு. இதற்கு இல்லாமலா போகும்?

- ராஜேஷ்குமார், எழுத்தாளர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com