வாசிப்பை நேசிப்போம்

இவ்வுலகில் புத்தகங்களும், புனித நூல்களும் தான் ஒருவனை மனிதனாக உருவாக்குகின்றன. புத்தகங்களை வாசிப்பதன் மூலமே ஒருவன் அறிவாளியாக மாறுகிறான்.
வாசிப்பை நேசிப்போம்
Published on

இவ்வுலகில் புத்தகங்களும், புனித நூல்களும் தான் ஒருவனை மனிதனாக உருவாக்குகின்றன. புத்தகங்களை வாசிப்பதன் மூலமே ஒருவன் அறிவாளியாக மாறுகிறான். இன்றைய இளைய சமுதாயம் செல்போன் பயன்படுத்துவதிலும், சினிமா பார்ப்பதிலும் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். அந்த நேரத்தில் புத்தகங்களை நேசித்து வாசித்தால் நன்மை பயக்கும். வேலைக்கு செல்கின்ற இடத்தில் அதிக பயன் தரும். அண்ணா, பெரியார், அம்பேத்கர், அப்துல் கலாம் போன்ற மாபெரும் மனிதர்கள் தங்கள் வாழ்நாளின் இறுதி வரை புத்தகங்களை வாசித்து கொண்டே இருந்தனர். நாம், ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும்போதும் ஓர் புதிய அனுபவத்தை உணரலாம். அனுபவத்தின் முதல் ஆசான் புத்தகமே.

நாம் ஒரு புத்தகத்தை தேடும்போது, நமது தேடலானது ஈ யை போன்று இருக்கக் கூடாது. தேனீயை போன்று இருக்க வேண்டும். ஏனென்றால் ஈ யானது நமக்கு தீமையை ஏற்படுத்துவதாகும். தேனீ நமக்கு நன்மை விளைவிக்க கூடியதாகும். ஆகவே, நல்ல புத்தகங்களை கண்டறிந்து வாசிக்க வேண்டும். ஒரு சின்னஞ்சிறு குருவிகளிடம் இருக்கும் சிந்தனைகூட மனிதர்களிடம் இல்லை என்பதுதான் நாம் காணும் சமூக சிந்தனையாகும். நம் வாசிப்பு என்பது மரத்தினை போல் நிலைத்திருக்க வேண்டும். மரம் என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு உதாரணமே. மரம், மனிதர்களுக்கு பலவகைகளில் உதவுகிறது. அதேபோலத்தான் வாசிப்பும். நம் வாசிப்பை ஆல மரத்தினை போல் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வாசிப்பதால் தான் ஒரு மனிதன், மரம் போல வளர்ச்சி அடைய முடியும்.

ஒருமுறை அம்பேத்கர் வெளிநாடு சென்றிருந்தபோது, அய்யா தங்களுக்கு எங்கு அறை ஒதுக்க வேண்டும் என்று ஓட்டல் ஊழியர்கள் கேட்டதற்கு, இந்த ஓட்டலில் எங்கு புத்தகங்கள் அதிகம் வைக்கப்பட்டு இருக்கிறதோ, அதற்கு அருகில் அறை ஒதுக்கி தாருங்கள் என்று கேட்டார். பேரறிஞர் அண்ணா உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு ஆபரேஷன் செய்ய அரங்கு தயாராக இருந்த நேரத்தில் டாக்டர்களிடம் அண்ணா சொன்னார், நான் ஒரு புத்தகத்தை முக்கால்வாசி படித்து முடித்து விட்டேன், எனக்கு சற்று நேரம் ஒதுக்கி தாருங்கள், அந்த நேரத்தில் முழுமையாக அந்த புத்தகத்தை வாசித்து முடித்து விடுகிறேன், அதன்பிறகு உங்கள் பணியை செய்யுங்கள் என்றார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தனது முதிய பருவத்திலும் பூதக்கண்ணாடி வாயிலாக புத்தகங்களை வாசித்து கொண்டே இருந்தார். அதேபோல நாமும் நல்ல கருத்துள்ள புத்தகங்களை தேடிப்பிடித்து வாசிப்போம், புத்தகங்களை நேசிப்போம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com