

நாட்டுப்புற நடனங்கள் நமது நாட்டின் பாரம்பரியத்தையும் கட்டிக்காக்கின்றன. இந்த கலைகள் மூலம் நமது நாட்டு கலை, கலாசாரம், பண்பாடு, வரலாறு போன்றவை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கலைகளில் ஒன்று, மரக்கால் ஆட்டம். இதனை கொக்கலிக்கட்டை ஆட்டம் என்றும் அழைக்கிறார்கள்.
நீண்ட கால்களையுடைய கொக்கு போன்று உயரமான மரக்கட்டைகளைக் காலில் கட்டிக்கொண்டு இதனை ஆடுவதால் கொக்கலிக்கட்டை ஆட்டம்' என்று கூறுகின்றனர். மூன்று, நான்கு கால்களைஉடைய இருக்கைகள் முறையே முக்காலி, நாற்காலி என்று அழைக்கப்படுகின்றன. அதை போன்று, கொக்கு கால்களைப்போல உயரமான கால்கள் இந்த ஆட்டத்திற்கு பயன்படுவதால், `கொக்காலி' என்று சூட்டப்பட்டுப் பின்னர் `கொக்கலி' என்று மருவி இருப்பதாக தெரியவருகிறது.
வேலூர், வாலாஜாபேட்டை போன்ற ஊர்களில் வைகாசி மாதம் அமாவாசையை அடுத்துவரும் செவ்வாய்க்கிழமை கெங்கையம்மன் கோவிலுக்கு காப்புக்கட்டி அடுத்த செவ்வாய் அன்று அதாவது, காப்பு கட்டிய 8-ம் நாள் திருவிழா நடத்தப்படுகிறது. அத்திருவிழாவில் அம்மனுக்கு நேர்ந்துகொண்ட ஆண்கள் கொக்கலிக்கட்டை ஆட்டத்தில் கலந்து கொள்வர். பெண்கள் இந்த ஆட்டத்தை ஆடுவதில்லை.
ஆட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னால் தேவையான பயிற்சியினை பெறுகின்றனர். அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரர் பயிற்சியளிப்பார். பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே பயிற்சியளிக்கப்படுகிறது. தைரியமும், உற்சாகமும் மிக்க ஒருவர் இரவு நேரங்களில், நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் வீதம் 10 நாட்களில் இந்த ஆட்டத்தை கற்றுக்கொள்ள முடியும். இதனை கற்றுக்கொடுக்க பயிற்சி பள்ளி எதுவும் கிடையாது.
இந்த ஆட்டத்திற்கு மிக முக்கியமானது காலில் கட்டிக்கொண்டு ஆடும் மரக்கட்டைதான். கட்டை இரண்டரை முதல் 5 அடி உயரங்கொண்டது. சிலர் ஏழு அடி கொண்ட கட்டையையும் பயன்படுத்துகிறார்கள். கட்டையின் தோற்றம் பொதுவாக அடிப்பகுதியில் மெலிந்து மேலே செல்ல செல்ல சற்று பருத்து பாதம் வைக்குமளவுக்கான அமைப்பை பெற்றிருக்கும். பாதம் வைக்குமிடத்திற்கு மேலே மெல்லியதாக அரையடி உயரத்திற்கு நீட்டிக்கொண்டிருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். காலோடு கட்டையை வைத்துப் பிணைத்து கொள்வதற்கு அது உதவுகிறது.
கொக்கலிக்கட்டை ஆட்டம் ஆடுவோர் அம்மனுக்குக் காப்புக்கட்டியது முதல், ஆட்டம் முடியும்வரை விரதமிருக்கின்றனர். இரவில் கோவிலிலேயே தூங்குகின்றனர். விரதத்தின் மூலம் அவர்களுக்கு அதிக தன்னம்பிக்கை கிடைக்கிறது.
இந்த ஆட்டத்திற்கான ஒப்பனை தனித்தன்மை வாய்ந்தது. வாலாஜாபேட்டையில் திருவிழா நடப்பதற்கு முதல்நாள் இரவு 7 மணிக்கே ஒப்பனை செய்யத் தொடங்குகின்றனர். ஒப்பனை செய்யும் ஒருவர், 3 பேருக்கு அலங்காரம் செய்வதற்குள் விடிந்துவிடும். அவ்வளவு நிதானமாக ஒப்பனை செய்யவேண்டியதிருக்கிறது.
உடலில் பழங்குத்துதல் என்பது ஒப்பனையில் இன்றியமையாத அம்சம். மெல்லிய ஊசியில் நூல்கோர்த்து அதனை எலுமிச்சம் பழத்தில் குத்திப் பின்னர் மார்புத் தோலில் கோர்த்துவிடுவர். இரு கைகளிலும் பழம் குத்தி ஒப்பனை செய்து கொள்வதும் உண்டு. தோளில் பிளாஸ்டிக் அல்லது பஞ்சால் செய்யப்பட்ட கிளிகளைக் கட்டிக் கொள்வர். பின்பு மார்பில் பெருக்கல் குறிபோல மலர் மாலை அணிந்துகொள்வார்கள்.
இ்ந்த ஆட்டக்காரர்கள் முன்பு பாரம்பரிய மஞ்சள் அரைக்கை சட்டை அணிந்தனர். இப்போது பல நிறங்களிலும் சட்டை அணிந்து ஆடுகின்றனர். கட்டையில் சலங்கை கட்டப்பட்டிருக்கும். கட்டை களைக் கட்டும் முன்பு அவற்றைக் கோவில் வாசலில் வைத்து சூடமேற்றி வணங்குவார்கள்.
இரு கைகளையும் விரித்து, தொடாத அளவுக்கு இடைவெளி விட்டு ஆட்டக்காரர்கள் நின்று கொள்வர். வீதிகளில் செல்லும்போது 2 பேர் அல்லது 3 பேர் குழுவாக இணைந்து வரிசையாக நின்று ஆடுவார்கள். அகன்ற இடங்களிலும், கோவில் முன்புறமும் வட்டமாக நின்று கும்மிகொட்டி ஆடுவதுண்டு.
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடியதாக இளங்கோவடிகள் பதினோரு ஆடல்களை சுட்டிக்காட்டுகிறார். அவற்றுள் மரக்காலாடல் என்பதை கொக்கலிக்கட்டை ஆட்டம் என்று கணிப்பதும் உண்டு.
முன்பு வேலூர், வாலாஜாபேட்டை போன்ற பகுதிகளில் உள்ள கெங்கையம்மன் கோவில் விழாக்களில் மட்டுமே ஆடப்பட்டு வந்த இந்த ஆட்டம், கடந்த பத்து ஆண்டுகளில் தன் ஆடுகளத்தை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. அழைப்பின்பேரில் வெளியூர் கோவில் விழாக்களிலும் இவர்கள் கலந்துகொண்டு ஆடுகின்றனர். வெளியூர் செல்லும்போது 10 பேர்வரை செல்கின்றனர். சுதந்திர தினம், குடியரசு தினம், அமைச்சர்கள் வரவேற்பு முதலான அரசு விழாக்களிலும் அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இந்த ஆட்டம் இடம்பிடிக்கிறது. கோவில் விழாக்களில் கலந்துகொள்ளும்போது மட்டுமே இந்த கலைஞர்கள் விரதம் மேற்கொள் கிறார்கள்.
ஆந்திரா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம் முதலான மாநிலங்களிலும் இந்த ஆட்டம் ஆடப் படுவதுண்டு. கர்நாடகத்தில் மரக்காலு பீசு கம்சாலே' என்று இதனை அழைக்கிறார்கள். அங்கு ஆட்டத்தின்போது மாகதேசுவரனைப் பற்றிய பக்திப் பாடல்கள் பாடப்படுகின்றன.
- கலை வ(ள)ரும்.
தகவல்: இளவழகன், நாட்டுப்புற கலைகள் துறை - பகுதி நேர விரிவுரையாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.