சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல்: எந்த உடற்பயிற்சி சிறந்தது?

இன்றைய காலகட்டத்தில் சைக்கிள் ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஜாக்கிங் போன்ற ஓட்டப்பயிற்சி மீது ஆர்வம் இல்லாதவர்கள் சைக்கிளிங் பயிற்சியை தேர்ந்தெடுக்கிறார்கள். இரண்டு பயிற்சிகளில் எது சிறந்தது? என்ற கேள்வியும் நிறைய பேரிடம் இருக்கிறது.
சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல்: எந்த உடற்பயிற்சி சிறந்தது?
Published on

 இரண்டுமே எரோபிக் பயிற்சிகள்தான். ஆனால் ஓடுவது, சைக்கிள் ஓட்டுவதை விட அதிக கலோரிகளை எரிக்க உதவும். அதே வேளையில் தசைகளை கடினமாக்கிவிடும். உடல் வலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வதுதான் சிறந்தது. இரு பயிற்சிகளாலும் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

இதய ஆரோக்கியம்:

சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது இரண்டும் ஏரோபிக் செயல்பாடுகள் என்பதால், அவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியவை. இவ்விரு பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

தினமும் தவறாமல் செய்து வரும்போது இதயத்திற்கு ரத்தத்தை திறம்பட 'பம்ப்' செய்யும். அதனால் இதயம் வலுப்படும். எனினும் இந்த பயிற்சிகளை ஒரு நாளைக்கு 60 நிமிடங்களுக்கு மேல் செய்யாதீர்கள். அளவுக்கு மீறி செய்வது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.

கலோரிகள் எரிக்கப்படும்:

சைக்கிள் ஓட்டுவது மென்மையான பயிற்சி முறை. ஓடுவதுடன் ஒப்பிடும்போது தசை களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காது. ஓடுவதை விட அதிக நேரம் சைக்கிள் ஓட்டவும் முடியும். எனினும் ஓடுவதில்தான் அதிக கலோரிகள் எரிக்கப்படும். சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகிய இரண்டு பயிற்சிகளையும் செய்து வந்தால் நிச்சயமாக அதிக கலோரிகளை சிரமமில்லாமல் எரிக்க முடியும்.

எடை இழப்பு:

உடல் எடையை குறைப்பதற்கும், கலோரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலோரி களின் அளவை குறைப்பது முக்கியம். இந்த விஷயத்தில் ஓடுவதுதான் விரைவாக எடை குறைவதற்கு வழிவகுக்கும். சைக்கிள் ஓட்டுவதன் மூலம் எடையை குறைப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். அதேவேளையில் உடற்பயிற்சிகள் மட்டுமே எடையை குறைப்பதற்கு உதவாது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதும், சரியான நேரத்தில் தூங்குவதும் முக்கியம்.

தசை கட்டமைப்பு:

இரண்டு பயிற்சிகளையும் ஒப்பிடும்போது சைக்கிள் ஓட்டுவது, இடுப்புக்கு கீழ் பகுதியில் உள்ள தசைகளை உருவாக்க, வலுப்படுத்த உதவும். ஓடும் விஷயத்தில் அனைத்து தசைகளும் ஒரே நேரத்தில் சீரான இயக்கத்தில் இருக்கும். உடலை வலிமையாக்க உதவும். ஆனால் சைக்கிள் ஓட்டும்போது கால் தசைகள்தான் அதிகமாக செயல்படும். உடல் தசைகளை முழுமையாக கட்டமைக்க இரு பயிற்சிகளையும் மேற்கொள்வதுதான் சிறந்தது.

ஓடுவது அதிக கலோரிகளை எரிக்க உதவும் என்றாலும் அதனுடன் சில எடை தூக்கும் பயிற்சிகளையும் மேற் கொள்ளலாம். அவை தசைகளை இறுகச் செய்யும். உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். உடலுக்கு வடிவமும் கொடுக்கும். சைக்கிள் ஓட்டுவது கால் தசைகளைத்தான் வலுப்படுத்தும். முழு உடல் தசைகளுக்கும் பலன் அளிக்காது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com