வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இரவு நேரத்திற்கு ஏற்ற மென்மையான ஒளி அமைப்பு வழங்கப்பட்டுள்ளதால் ரெயிலில் உறங்குவது சுகமான அனுபவமாக மாறும்.
வந்தே பாரத்
Published on

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்களின் முதல் தேர்வாக ரெயில் போக்குவரத்து அமைந்திருக்கிறது. கழிவறை வசதி, தூங்கும் வசதி உள்ளிட்ட சவுகரியமான பயண அனுபவத்தை வழங்குவதுதான் அதற்கு காரணம்.

குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகள்

நீண்ட தூரத்தை வேகமாக சென்றடையும் நோக்கில் வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகமாகின. இருக்கை வசதி கொண்டதாக இயங்கி வரும் 'வந்தே பாரத்', தற்போது படுக்கை ரெயிலாகவும் மாறியிருக்கிறது. 'வந்தே பாரத் ஸ்லீப்பர் டிரெயின்' எனப்படும் இந்த படுக்கை ரெயிலில், குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. அதில் 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகள் பதினொன்றும், 2-ம் வகுப்பு படுக்கை பெட்டிகள் நான்கும், முதல் வகுப்பு பெட்டி ஒன்றும் இடம் பெற்று சொகுசான ரெயிலாக தயாராகி உள்ளது.

முதல் ரெயில் போக்குவரத்து

முதல் ரெயில் போக்குவரத்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கும், மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவுக்கும் இடையே இயக்கப்பட உள்ளது. மற்ற ரெயில் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரெயில் எந்தெந்த வகையில் எல்லாம் மாறுபட்ட பயண அனுபவத்தை கொடுக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

வழக்கமான ரெயில்களில் தனித்தனி பெட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டு என்ஜினுடன் இணைக்கப்பட்டிருக்கும். பயணத்தின் போது சில பெட்டிகளில் அதிர்வு ஏற்பட்டு சத்தம் எழுப்பும். வந்தே பாரத் ரெயிலில் ஒருங்கிணைந்த 'டிரெயின் செட்' மூலம் எல்லா பெட்டிகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் சீராக இயங்கும். வேகமும் நிலைத்தன்மை கொண்டிருக்கும். பயணத்தை அமைதியான சூழலுக்கு மாற்றும்.

தூக்கம்

இரவு பயணங்களில் தூக்கம் மிக முக்கியமானது. வழக்கமாக ரெயில்களில் கடினமான மெத்தைகள், மேல்படுக்கைக்கு ஏறுவதில் சிரமம், விளக்கொளியில் அதிக வெளிச்சம் போன்றவை தூக்கத்திற்கு தொந்தரவாக மாறும். ஆனால் வந்தே பாரத் படுக்கை ரெயிலில் மென்மையான மெத்தையில் தயாரிக்கப்பட்ட படுக்கைகள், மேல்படுக்கைக்கு எளிதாக செல்லும் வசதி, இரவு நேரத்திற்கு ஏற்ற மென்மையான ஒளி அமைப்பு வழங்கப்பட்டுள்ளதால் ரெயிலில் உறங்குவது சுகமான அனுபவமாக மாறும்.

அமைதி, சுத்தம்

வழக்கமான ரெயில்களில் வெளிச்சத்திற்காக திறந்த வெளி ஜன்னல், கதவமைப்புகள் காரணமாக தூசி, சத்தம், வெளிப்புற வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்டவை ரெயிலுக்குள் பிரதிபலிக்கும். வந்தே பாரத் படுக்கை ரெயிலில் முழுமையாக மூடி சீல் செய்யப்பட்ட காங்க்வே மற்றும் தானியங்கி கதவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ரெயிலுக்குள் காற்றின் தரமும், வெப்பநிலையும் எப்போதும் ஒரே நிலையில் பராமரிக்கப்படும். இதனால் நீண்ட பயணங்களிலும் சோர்வு குறைந்து, அமைதியான பயண அனுபவம் கிடைக்கும்.

கழிப்பறை வசதி

ரெயில் பயணத்தில் அதிகம் விமர்சிக்கப்படும் அம்சங்களில் ஒன்று கழிப்பறை வசதி. பலரும் பயன்படுத்தும்போது தூய்மையாக பராமரிக்கப்படாத நிலையில் காணப்படும். வந்தே பாரத் படுக்கை ரெயிலில் விமான தரத்திலான 'பயோ-வாக்கூம் கழிப்பறைகள்' பயன்படுத்தப்படுவதால், குறைந்த நீர் பயன் பாடு, சுத்தமான மற்றும் துர் வாசனை இல்லாத சூழல் நிலவும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறைகள் இடம் பெறும். முதல் வகுப்பு பெட்டியில் சூடுநீர் குளியல் வசதியும் இடம் பெற்றிருப்பது சிறப்பம்சம்.

தகவல்

மற்ற ரெயில்களில் பயணம் சார்ந்த தகவல்களை பெறும் வசதி குறைவாகவும், அவசர நேரங்களில் உதவி பெறுவது கடினமாகவும் இருக்கிறது. வந்தே பாரத் படுக்கை ரெயிலில் காட்சித் திரைகளுடன் இணைக்கப்பட்ட தகவல் அறிவிப்பு அமைப்பு, சி.சி.டி.வி. கண்காணிப்பு, அவசர நேரத்தில் நேரடியாக லோக்கோ பைலட்டுடன் தொடர்பு கொள்ளும் வசதி ஆகியவை வழங்கப் பட்டுள்ளன. இவை அனைத்தும் பயணியின் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.

வசதிகள்

ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட சார்ஜிங் பாயிண்ட், மடிக்கக்கூடிய சிற்றுண்டி மேசை, நவீன உட்புற அலங்காரம். தானியங்கி கதவுகள் போன்ற அம்சங்கள் பயண அனுபவத்தை மாறுபட்டதாக மாற்றும்.

வேகம்

இரவு நேர ரெயில்கள் மணிக்கு 110 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் நிலையில், வந்தே பாரத் படுக்கை ரெயில் சோதனை ஓட் டங்களில் 180 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியுள்ளது. மூன்று டம்ளர்களில் தண்ணீரை வரிசையாக வைத்து அதன் மீது மேலும் ஒரு டம்ளரில் தண்ணீரை நிரப்பி வைத்த நிலையிலும் கூட தண்ணீர் அதிக அதிர்வு இல்லாமலும், டம்ளரில் இருந்து வழிந்தோடாமலும் அப்படியே இருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

எதிர்கால ரெயில்வே

பாரம்பரிய ரெயில்கள் தேவைக்கு ஏற்ப உருவானவை என்றால், வந்தே பாரத் படுக்கை ரெயில்கள் எதிர்கால பயணிகளின் எதிர்பார்ப்புகளை முன் கூட்டியே உணர்ந்து வடிவமைக்கப்பட்டவை. இரவு நேர நீண்ட தூர பயணங்களை சோர்வாக அல்லாமல் சுகமான நினைவாக மாற்றும் இந்த ரெயில், இந்திய ரெயில்வேயை உலகத் தரத்திற்கு மாற்றும் முயற்சியின் ஓர் அங்கமாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com