பயணத்திற்கு தயார்படுத்தும்போது...

வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும்போது வீட்டில் வளர்க்கும் நாயை எங்கே விட்டுச்செல்வது என்று தெரியாமல் சிலர் திணறுவதுண்டு. கவனம், கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை, ஓரளவு பயிற்சி போன்றவை இருந்தால் வீட்டு நாயையும் காரில் கூடவே அழைத்துச் செல்லலாம்.
பயணத்திற்கு தயார்படுத்தும்போது...
Published on

வாகனத்தில் நாயை அழைத்துச்செல்ல விரும்புபவர்கள் முதலில் சிறிய தூர பயணத்திற்கு அதனை தயார்செய்யவேண்டும். அதன் பின்பு இயல்பாகவே அதிக தூர பயணத்திற்கு நாய்கள் தயாராகிவிடும். நாய்களை காரில் அழைத்துச் செல்லும் தொடக்க காலத்தில் சில நெருக்கடிகள் ஏற்படலாம். அதனை எப்படி எதிர்கொள்வது என்பதை நாய்களுக்கான பயிற்சியாளர் மூலமாக தெரிந்துகொள்ளவேண்டும்.

நாயை தயாராக்கும் முதற்கட்ட பயணங்களில் வாகனத்தை அவ்வப்போது ஓரமாக பாதுகாப்புடன் நிறுத்தி விட்டு சில நிமிடங்கள் நாயோடு பேசவேண்டும். வருடிக்கொடுத்து `ஒன்றாக பயணிக்கிறோம்.. அமைதியாக இரு..' என்று கூறவேண்டும். அப்போது அதற்கு பிடித்தமான உணவையும் வழங்கலாம். இவ்வாறு செய்தால் பயணத்திற்கு நாய்கள் உற்சாகமாக ஒத்துழைக்கும்.பயணத்தின்போது நாய்க்கு வாந்தியோ, சோர்வோ ஏற்படலாம். ஏற்பட்டால் கால்நடை டாக்டரிடம் ஆலோசித்து அதற்கான மருந்துகளை வாங்கிக்கொடுக்கவேண்டும். வாகனத்தில் அதற்கென்று நிரந்தரமாக தனி இடத்தை ஒதுக்குங்கள். பின் இருக்கையே சிறந்தது. அதில் அதற்கு பிடித்த விரிப்பை பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட பொம்மை மீது அதற்கு ஈர்ப்பு இருந்தால் அதையும் அருகில் வைத்திருங்கள். வெளியே நடப்பதை

கண்ணாடி வழியாக வேடிக்கை பார்க்க நாயை அனுமதிக்கலாம். ஆனால் தலையை வெளியே காண்பிப்பதற்கு அனுமதித்துவிடக்கூடாது.

வளர்ப்பு பிராணிகளுக்கான கூடுகள் கடைகளில் கிடைக்கும். சிறிய நாய் என்றால் அதனை பயன்படுத்தலாம். அது போதிய இடவசதிகொண்ட தாக, காற்றோட்டமிக்கதாக இருக்கவேண்டும். தூக்கிச்செல்லும் வசதியுடனும் இருக்கவேண்டும். சீட் பெல்ட்டுடன் கூட்டை இணைத்து அசையாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். நாய்களுக்கான சீட் பெல்ட்டுகள், பாத் பேக்குகள், லைப் ஜாக்கெட் போன்றவைகளும் கடைகளில் கிடைக்கும்.வாகன பயணத்தின்போது நாய்க்கு தேவையான மருந்து, உணவு- தண்ணீர் அருந்தும் பாத்திரம், டவல், போர்வை, சீப்பு, பிரஷ் போன்ற அனைத்தையும் மறக்காமல் எடுத்துச்செல்லவேண்டும். காரை ஓட்டுபவருக்கு நாயால் எந்த விதத்திலும் தொந்தரவு ஏற்பட்டுவிடக்கூடாது. அதனால் போதிய இடைவெளியிலே நாயை வைத்திருப்பது அவசியம். எந்த காரணத்தைக்கொண்டும் காரின் டிக்கியில் வளர்ப்பு பிராணிகளை திணித்துவிடக்கூடாது.

ஏ.சி.இல்லாத வாகனங்களில் நாயை அழைத்துச்செல்வதை தவிர்க்கலாம். ஏ.சி.இல்லாமல் இருந்தால் நாய்க்கு நல்ல காற்றோட்ட வசதி அவசியம். கோடை காலத்தில் பயணம் மேற்கொண்டால் அவ்வப்போது வாகனத்தை நிறுத்தி நாய்க்கு தண்ணீர் வழங்கவேண்டும். காருக்குள் நாயை வைத்து அடைத்துவிட்டு ஒருபோதும் வெளியே சென்றுவிடக்கூடாது.பயணத்திற்கு முன்பு நாய்க்கு அதிகமான அளவில் உணவு கொடுப்பது சரியல்ல. நிறைய தண்ணீர் பருகவும் அனுமதிக்கக்கூடாது. அதை மலம், சிறுநீர் கழிக்கவைத்த பின்பு வாகனத்தில் ஏற்றவேண்டும். இரண்டு மணி நேர பயணத்திற்கு ஒருமுறை காரை நிறுத்தி நாயை கீழே இறக்கி, பத்து நிமிடங்கள் நடக்கவைத்து `ரிலாக்ஸ்' செய்த பின்பு பயணத்தை தொடருவது நல்லது. ரெயில் மற்றும் விமான பயணங்களின்போதும் வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com