பூடானில் ஏன் வானளாவிய கட்டிடங்கள் இல்லை? இதுதான் காரணம்!

நகரங்களின் இயற்கை அழகையும், கலாசார அடையாளத்தையும் பாதிக்கும் வகையில் மிக உயரமான கட்டிடங்களை கட்ட அங்கு ஊக்குவிப்பதில்லை.
பூடான்
Published on

உலகின் பெரும்பாலான நகரங்களில் நூற்றுக்கணக்கான வானளாவிய கட்டிடங்கள் வானத்தைத் தொடும் அளவுக்கு உயரமாக காட்சியளிக்கின்றன. ஆனால் இந்தியாவின் அண்டை நாடான பூடானில், உலகின் பிற பெருநகரங்களில் காணப்படுவது போல மிக உயரமான, அதாவது ஸ்கைகிராப்பர் எனப்படும் வானளாவிய கட்டிடங்களை இன்றுவரை பார்க்க முடியாது.

பூடானில் சில வகை மாடிக்கட்டிடங்கள் உள்ளன. ஆனால் 40, 50 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டி டங்கள் (ஸ்கைகிராப்பர்) எதுவும் இல்லை. இதற்கு பொருளாதார பலவீனமோ, தொழில்நுட்ப வசதியின்மையோ காரணமல்ல. தங்களது பாரம்பரிய கட்டிடக்கலை, கலாசார அடையாளம் மற்றும் இயற்கை சூழலைப்பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் நீண்டகால கொள்கைதான் இதன் பின்னணி காரணமாகும்.

பாரம்பரிய கட்டிடக்கலைக்கு முன்னுரிமை

பூடானில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்போது. அவை பாரம்பரிய பூடான் கட்டிடக்கலை பாணியை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. கட்டிடங்களின் வெளிப்புற வடிவமைப்பு, மர வேலைப்பாடுகள், ஜன்னல்கள், கூரைகள் மற்றும் அலங்காரங்கள் அனைத்தும் பாரம்பரிய தோற்றத்துடன் அமைக்கப்பட வேண்டும். இதனால், நகரங்களின் இயற்கை அழகையும், கலாசார அடையாளத்தையும் பாதிக்கும் வகையில் மிக உயரமான கட்டிடங்களை கட்ட அங்கு ஊக்குவிப்பதில்லை.

வளர்ச்சியை எதிர்க்கும் நாடு அல்ல

பூடான் வளர்ச்சியை எதிர்க்கும் நாடு அல்ல. நவீன சாலைகள், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி போன்ற துறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால் வளர்ச்சி என்பது உயரமான கட்டிடங்கள் மட்டுமல்ல. இயற்கை, கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அந்த நாட்டின் அணுகு முறையாகும்.

உலகையே கவர்ந்த வளர்ச்சி கொள்கை

பூடான், 'கிராஸ் நேஷனல் ஹேப்பினஸ்' (ஜி.என்.எச்) என்ற தனித்துவமான வளர்ச்சி கொள்கையின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்த கொள்கை பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாமல், மக்களின் மகிழ்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாசார பாரம்பரியம் மற்றும் நல்லாட்சிக்கும் சம முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் காரணமாக, சிறிய நாடாக இருந்தாலும் உலகின் தனித்துவமான நாடுகளில் ஒன்றாக பூடான் திகழ்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com