விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவது ஏன்? தெரியுமா!

விமானத்தின் பாதுகாப்பான இயக்கத்துக்கு அதனை வழிநடத்தும் விமானியே (பைலட்) இறுதி பொறுப்பை ஏற்கிறார்.

விமானம் அவசரமாக தரையிறக்குப்படுவது ஏன்?
விமானம்
Published on

விமானப் பயணத்தின்போது நீங்கள் பயணிக்கும் விமானம் தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் விமான நிலையத்துக்கு செல்லாமல் வேறு விமான நிலையத்துக்கு திடீரென திருப்பி விடப்படலாம். இதனை 'பிளைட் டைவர்ஷன்' என்கிறார்கள்.

அத்தகைய அவசர நிலையின்போது விமானம் உடனே அருகில் இருக்கும் விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று பலரும் நினைப்பார்கள். அதன்படியே சில சமயங்களில் விமானம் தரையிறங்கவும் செய்யும். ஆனால் அவசர நிலையை கருத்தில் கொண்டும், விமானத்தின் நிலையை கவனத்தில் கொண்டுமே இறுதி முடிவு எடுக்கப்படும்.

விமானம் ஏன் வேறு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்படுகிறது?

விமானம் திட்டமிட்ட இடத்தில் பாதுகாப்பாக தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் வேறு விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்படலாம்.

அதற்கு முக்கிய காரணங்கள்:

இடியுடன் கூடிய புயல், கனமழை அல்லது பலத்த காற்று போன்ற மோசமான வானிலை.

பராமரிப்பு பணிகள் அல்லது வேறு சம்பவம் காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுதல். விமான என்ஜின், மின்சாரம், ஹைட்ராலிக் அல்லது அழுத்தக்கட்டுப்பாடு தொடர்பான தொழில்நுட்பக் கோளாறுகள்.

விமானத்தில் போதுமான எரிபொருள் இல்லாத நிலை.

பயணி அல்லது விமானப்பணியாளருக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுதல். கட்டுப்பாட்டு அனுமதி தொடர்பான பிரச்சினைகள் அல்லது சில பாதுகாப்பு காரணங்களால் ஏற்படும் மாற்றங்கள்.

உதாரணமாக, விமானத்தில் முக்கியமான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், திட்டமிட்ட விமான நிலையம் வரை தொடர்ந்து செல்வதை விட, அதற்கு பொருத்தமான அருகில் இருக்கும் விமான நிலையத்தில் தரையிறங்குவது பாதுகாப்பானதாக இருக்கலாம். அதேபோல், பயணியின் உடல்நிலை மோசமாகி உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் தேவையான மருத்துவ வசதிகள் இருக்கும் விமான நிலையத்துக்கு விமானம் திருப்பி விடப்படலாம்.

எப்போதும் அருகில் இருக்கும் விமான நிலையம் ஏன் தேர்வு செய்யப்படுவதில்லை?

விமானம் திருப்பி விடப்படும்போது மிக அருகில் இருக்கும் விமான நிலையத்தில்தான் தரையிறங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விமானத்தின் தற்போதைய தொழில்நுட்ப நிலை, எரிபொருள் அளவு, காற்றின் வேகம் மற்றும் திசை, வானிலை, ஓடுதளத்தின் நீளம் மற்றும் அதன் தன்மை, தரையிறங்குவதற்கான வழிகாட்டி வசதிகள், விளக்குகள், தீய ணைப்பு மற்றும் மீட்பு வசதிகள், மருத்துவ வசதிகள் உள்பட பல விஷயங்கள் பரிசீலிக்கப்படும்.

உதாரணமாக, அருகிலுள்ள விமான நிலையத்தின் ஓடுதளம் குறிப்பிட்ட விமானத்துக்கு போதுமான நீளத்தில் இல்லாமல் இருக்கலாம். அல்லது அங்கு நிலவும் வானிலை தரையிறங் குவதற்கு ஏற்றதாக இல்லாமல் போகலாம். அதனால் அருகில் இருக்கும் விமான நிலையம் என்பதை காட்டிலும், அந்த நேரத்தில் பாதுகாப்பான மற்றும் பொருத்தமான விமான நிலையத்தைத்தான் தேர்வு செய்வார்கள்.

யார் முடிவு எடுப்பார்?

விமானத்தின் பாதுகாப்பான இயக்கத்துக்கு அதனை வழிநடத்தும் விமானியே (பைலட்) இறுதி பொறுப்பை ஏற்கிறார். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) சில சூழ்நிலைகளில் மாற்று விமான நிலையம் தொடர்பாக வழிகாட்டலாம். ஆனால் விமானத்தை பாதுகாப்பாக எங்கு திருப்புவது என்பது தொடர்பான இறுதி முடிவு எடுப்பது விமானியின் வசமே இருக்கும்.

விமானம் வேறு இடத்தில் தரையிறங்கினால்...

விமானம் திட்டமிடப்படாத விமான நிலையத்தில் தரையிறங்குவது பயணிகளுக்கு கூடுதல் தாமதத்தையும், அடுத்தடுத்த விமானங்களை தவறவிடும் சூழ்நிலையையும் ஏற்படுத்தலாம். பொதுவாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பயணிகளை மாற்று விமானத்தில் அனுப்புவதற் கான ஏற்பாடுகளை செய்யும். தாமதமாகும் கால அளவு மற்றும் அந்த நாட்டின் விதிமுறை களை பொறுத்து உணவு, தங்குமிடம். ஓட்டலுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து போன்ற உதவிகளும் வழங்கப்படலாம். ஆனால், பயணிகளுக்கு கிடைக்கும் உதவிகள் விமான நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் விமானம் ஏன் திருப்பி விடப்பட்டது என்பதற்கு ஏற்ப மாறுபடலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com