

ஜெர்மனி,
அன்று ஆகஸ்ட் 5, 1888. அதிகாலை நேரம். கணவர் கார்ல் பென்ஸ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். கணவருக்குத் தெரியாமல், அவர் கண்டுபிடித்து வைத்திருந்த மூன்று சக்கர 'மோட்டார் வேகன்' காரை நைசாக வெளியே தள்ளுகிறார் அவரது மனைவி பெர்த்தா பென்ஸ். தனது 13 மற்றும் 15 வயது மகன்களை காரில் ஏற்றிக்கொண்டு, யாருக்கும் சொல்லாமல் 105 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தாயார் வீட்டிற்குப் புறப்படுகிறார் குதிரை இல்லாத அந்த விசித்திர வண்டியைப் பார்த்து வழியெங்கும் மக்கள் அலறியடித்து ஓடுகிறார்கள். 'பேய் வண்டி' என்றும், பெர்த்தாவை 'சூனியக்காரி' என்றும் திட்டுகிறார்கள்.
ஜெர்மனியில் 1849-இல் பிறந்த பெர்த்தா, இளம் வயதிலேயே அறிவியலிலும் எந்திரங்களிலும் ஆர்வம் கொண்டவர். கார்ல் பென்ஸ் என்ற ஏழைப் பொறியாளரைக் காதலித்து திருமணம் செய்தார். கணவரின் கார் கண்டுபிடிப்பு முயற்சிக்குத் தனது சொத்துக்கள் முழுவதையும் முதலீடாகக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். கார்ல் பென்ஸ் காரைக் கண்டுபிடித்தாலும், "இந்தக் குதிரை இல்லாத வண்டி நமக்கெதற்கு?" என்று பொதுமக்கள் அதை வாங்க மறுத்தனர். கணவரோ பயந்து போய் காரை வெளியே எடுக்கத் தயங்கினார்.
1886-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கார்ல் பென்ஸ் தனது பெட்ரோல் கார் கண்டுபிடிப்புக்கான அதிகாரப்பூர்வ காப்புரிமை சான்றிதழைப் பெற்றார்.
வழியில் வந்த ஆபத்துகள் அசத்தலான ஐடியாக்கள்
கணவரின் தயக்கத்தை உடைக்கவே பெர்த்தா அந்த ரகசியப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால், அந்தப் பயணம் சாதாரணமானதாக இருக்கவில்லை.
குழாய் நடுவழியில் காரின் எரிபொருள் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. பெர்த்தா பதறவில்லை. தனது தலையில் இருந்த 'ஹேர்பின்னை' கழற்றி அடைப்பைச் சரிசெய்தார். காரின் ஒயரிங் பழுதான போது, தான் அணிந்திருந்த உடம்பில் மாட்டும் எலாஸ்டிக் பட்டையைக் கழற்றி இன்சுலேஷன் டேப் போலப் பயன்படுத்தி சரிசெய்தார். மர பிரேக்குகள் தேய்ந்து போனபோது, வழியிலிருந்த ஒரு செருப்பு தைப்பவரிடம் சென்று, பிரேக் கட்டைகளில் லெதர் (தோல்) துண்டுகளைப் பொருத்தினார். இதுவே உலகின் முதல் 'பிரேக் லைனிங்' கண்டுபிடிப்பாக மாறியது.
அக்காலத்தில் பெட்ரோல் பங்க்குகள் கிடையாது. காரில் எரிபொருள் தீர்ந்தபோது, வழியிலிருந்த 'வீஸ்லோக்' என்ற மருந்துக் கடைக்குச் சென்று, அங்கு கறை நீக்கப் பயன்படும் 'லிக்ரோயின்' என்ற ரசாயனத்தை வாங்கி காரில் ஊற்றினார். இதனால், அந்த மருந்துக் கடையே வரலாற்றின் 'முதல் பெட்ரோல் பங்க்' என்ற பெருமையைப் பெற்றது.
அனைத்துத் தடைகளையும் தாண்டி, மாலை நேரத்தில் தாயார் வீட்டை அடைந்து கணவருக்கு "நாங்கள் பத்திரமாக வந்துவிட்டோம்" என்று தந்தி (Telegram) அனுப்பினார். இந்த ஒற்றைப் பயணம் காட்டுத்தீ போல உலகெங்கும் பரவியது. "கார் என்பது வெறும் பொழுதுபோக்கு பொம்மை அல்ல, அது மனிதர்களைத் தூர இடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் அற்புதம்" என்பதை உலக மக்கள் புரிந்துகொண்டனர்.
பெர்த்தா பென்ஸின் இந்த அதிரடிப் பயணம் மட்டும் இல்லையென்றால், இன்று நாம் பார்க்கும் பிரம்மாண்ட 'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனமோ அல்லது கார் கலாசாரமோ இவ்வளவு சீக்கிரம் சாத்தியமாகி இருக்காது. அதனால்தான் இவர் மோட்டார் வாகன உலகின் 'அசத்தல் நாயகி' என்று போற்றப்படுகிறார்.