

வங்கிகளின் மோசமான செயல்பாடுகளுக்கு அரசை குற்றம் சாட்டுகின்றன.
பத்து பொதுத்துறை வங்கிகளை இணைத்து, நான்கு பெரும் வங்கிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக சென்ற மாதம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகிய நான்கு பெரிய நங்கூர வங்கிகளுடன் இணைக்கப்படும். இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் தேவைகளை நிறைவேற்றும் பலமும், நெகிழ்வுத்தன்மையையும் இவை பெறும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்டதாக உருமாற, இந்த வங்கிகளின் இணைப்பு, வழிவகை செய்யும் என்று நிர்மலா சீதாராமன் எதிர்பார்க்கிறார். நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வங்கிகளின் இணைப்பு செய்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பலம் பொருந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இதை எதிர்க்கின்றன. வேலை இழப்பு ஏற்படும் என்ற பயத்தில், அவை போராட்ட பாதையில் உள்ளன. அரசு அறிவித்துள்ள முடிவுகள் தர்க்கபூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் தவறானவை. பலவீனமான வங்கியை பலமான வங்கியுடன் இணைக்கும் நோக்கம் இதில் இல்லை. பூகோள ரீதியாக ஒன்றுபடுத்தத்தக்க வங்கிகளை இணைக்கும் திட்டமும் இதில் இல்லை என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கூறுகிறது.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய தேசிய வங்கிகளின் அதிகாரிகள் காங்கிரஸ் மற்றும் தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகியவை செப்டம்பர் 26 மற்றும் 27-ந் தேதிகளில் அகில இந்திய அளவில், வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்ததால் இந்த போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
வங்கிகளின் இணைப்பு இந்திய பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள மற்றொரு துல்லிய தாக்குதல் என்கிறார் இந்திய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பின் தலைவரான சி.ஜெ.நந்தகுமார். வளரும் பொருளாதாரத்திற்கு மிகவும் அத்தியாவசியமான வளர்ச்சி வங்கிகளை முதலில் அழித்தனர். இவை இல்லாத நிலையில், பெரும் மின் உற்பத்தி திட்டங்களுக்கும், உள்கட்டுமான திட்டங்களுக்கும் வணிக வங்கிகள் கடன் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பெரிய கடன்கள் திருப்பி செலுத்தப்படவில்லை. இதனால் வாராக் கடன்கள் பெரிதும் அதிகரித்தன. கடந்த சில வருடங்களாக வங்கி நிர்வாகங்கள், விஞ்ஞான பூர்வமற்ற ஆள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன் என்கிறார்.
இறுதியாக, பண நீக்க நடவடிக்கையின் மூலம் வங்கித்துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி பெரும் பின்னடைவை ஏற்படுத்தினார்.
வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த அரசு தான் காரணம் என்கிறார் நந்தகுமார்.
வங்கிகள் இணைப்பு மிகவும் சிக்கலான, சவாலான விஷயமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். வங்கி கிளைகளின் எண்ணிக்கை சீரமைப்பு, ஊழியர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவை, இணைக்கப்பட்ட வங்கிகளுக்கு சவால் மிகுந்த பிரச்சினைகளாக இருக்கும்.
முன்பு எஸ்.பி.ஐ. வங்கியின் ஐந்து துணை வங்கிகள், எஸ்.பி.ஐ.யுடன் இணைக்கப்பட்டது. பாங்க ஆப் பரோ டாவுடன், தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இணைக்கப்பட்டன. ஆனால் இந்த இணைப்பு பணிகள் இன்றும் முழுமையடையாமல், பிரச்சினைகள் தொடர்கின்றன.
வங்கி கிளைகள் மூடல் மற்றும் ஆள் குறைப்பு நடவடிக்கைகள் எதுவும் நடக்காது என்று ஊழியர்கள் சங்கங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட பின்னர் தான் இந்த இணைப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே 2500 கிளைகளை எஸ்.பி.ஐ. மூடியுள்ளது. மேலும் பல கிளைகள் மூடப்படலாம் என்று இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறுகிறார். 2018-19-ல் மட்டும் 40,000 பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். புதிதாக 12,000-க்கும் குறைவான ஊழியர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஊழியர்கள் சேர்க்கை நடைபெற வாய்ப்பு குறைவு என்கிறார்.
வங்கி கிளைகள் மூடப்படுவதினால், ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டியிருக்கும். கடந்த காலங்களில், ஊழியர்கள் இடமாற்றத்திற்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. நங்கூர வங்கிகளின் ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மூப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் இணைக்கப்பட உள்ளன. இரண்டும் கர்நாடகா மாநிலத்தில் அதிக கிளைகளை கொண்டவை.
இவற்றை இணைப்பதன் மூலம் 30 முதல் 40 சதவீத கிளைகள் மூடப்படலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இணைப்புத்திட்டத்தில் இதை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக வங்கிகளில் ஊழியர் சேர்ப்பு விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. வங்கிகள் இணைப்பு பணிகளின் காரணமாக அடுத்த நான்கு ஆண்டுகளில் புதிதாக ஊழியர்கள் சேர்க்கை நடைபெறாது என்கிறார் நந்தகுமார். பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று அவர் கருதுகிறார்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வங்கி இணைப்புகளினால் இது மேலும் மோசமடையும். ஆனால், பண நீக்கம் போன்ற பைத்தியக்காரத்தனமான திட்டங்களை வங்கி ஊழியர்கள் மீது அரசு திணிக்கிறது. வங்கி பணிகளுக்கு பதிலாக இத்தகைய பணிகளை நாங்கள் செய்ய தள்ளப்பட்டோம். இதனால் வங்கிகளின் செயல் திறன் பாதிக்கப்பட்டது என்கிறார்.
வங்கி சேவைகள் இல்லாத பகுதிகளுக்கு வங்கி சேவைகளை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அந்த பகுதிகளுக்கு தனியார் வங்கிகள் செல்வதில்லை. இதற்காக பொதுத்துறை வங்கிகள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை தக்கவைக்க வேண்டிய தேவை உள்ளது.
வங்கிகள் இணைப்பின் மூலம் வங்கித்துறையின் செயல் திறன் மற்றும் நிகர பலன்கள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. நாட்டின் தேவைகளை அரசு கருத்தில் கொண்டு, வளரும் பொருளாதாரத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தால், இந்த இணைப்பு நன்மை அளிக்கும் என்று வளர்ச்சிகான ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பொருளியல் அறிஞர் டாக்டர் வினோஜ் ஆப்ரகாம் கூறுகிறார்.
ரிசர்வ் வங்கி மூலம் சரியான முறையில் ஒழுங்குமுறை செய்யப்படுவதன் மூலமே வங்கித்துறையின் வெற்றி அமையும். ஆனால் சமீப வருடங்களில் அரசாங்கத்தின் தலையீடுகள் அதிகரித்துள்ளதால், ரிசர்வ் வங்கியின் சுயாட்சி அதிகாரம் குறைந்து வருகிறது.
வங்கிகளின் ஒழுங்குமுறையாளரான ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் சமீபத்தில் நடந்த தலையீடுகளை சுட்டிக்காட்டும் ஆப்ரகாம், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டால், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வீணாகி விடும் என்கிறார்.