

மும்பை
மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 38 சதவீதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது.
முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.2,483 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. 2017-18-ஆம் நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 38 சதவீத வளர்ச்சியாகும். அப்போது லாபம் ரூ.1,800 கோடியாக இருந்தது. முந்தைய காலாண்டுடன் (அக்டோபர்-டிசம்பர்) ஒப்பிடும்போது லாபம் 1.1 சதவீதம் குறைந்துள்ளது (ரூ.2,510 கோடி). ஒட்டுமொத்த வருவாய் 9 சதவீதம் உயர்ந்து ரூ.15,006 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிகர லாபம் 12 சதவீதம் அதிகரித்து ரூ.9,003 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது ரூ.8,008 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 7.5 சதவீதம் உயர்ந்து (ரூ.54,487 கோடியில் இருந்து) ரூ.58,584 கோடியாக அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது விப்ரோ நிறுவனப் பங்கு ரூ.291.30-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.291.95-க்கும், குறைந்தபட்சமாக ரூ.278.10-க்கும் சென்றது. இறுதியில் இப்பங்கு ரூ.281.10-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 2.45 சதவீதம் ஏற்றமாகும்.