

இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து இது நாள் வரை நடைமுறையில் இருந்து வந்த சம்பிரதாயங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமான சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு..
* ராணி எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார். ராணி இறந்தவுடன், அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னர் ஆனார். இந்த மாற்றம் மூலம் அவர் இங்கிலாந்து அரச வாரிசு வரிசையில் இதுநாள் வரை நீடித்த முதல் இடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் 3 வயதில் இருந்தே அந்த இடத்தை தக்கவைத்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* இது 1952-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வந்த வாரிசு வரிசையில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும். எலிசபெத் தனது தந்தை கிங் ஜார்ஜ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ராணியானார்.
* மன்னர் சார்லஸ் அரியணை ஏறியவுடன், இளவரசர் வில்லியம் இப்போது வாரிசு வரிசையில் முதலிடத்தில் உள்ளார். வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் முதல் மகனான இளவரசர் ஜார்ஜ் இப்போது வாரிசு வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த இடங்களில் அவரது உடன் பிறப்புகள் இளவரசி சார்லோட், இளவரசர் லூயிஸ் ஆகியோர் உள்ளனர். இளவரசர் ஹாரி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
* பிரிட்டிஷ் தேசிய கீதத்தின் பாடல் வரிகள் 'காட் சேவ் தி குயின்' என்று ஒலிக்கப்பட்டு வந்தது. இப்போது அது 'காட் சேவ் தி கிங்' என மாற்றப்பட்டுள்ளது. இது 1745-ல் எழுதப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் தேசிய கீதமாக அறியப்பட்டது. ராணி என்பதற்கு பதிலாக ராஜா என்று மாற்றப்பட்டுள்ளதை தவிர, பிற அனைத்து பாடல் வரிகளும் அப்படியே இருக்கும்.
* ராணி எலிசபெத்தின் ஆட்சியின் போது, பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டு அலுவலகங்கள், 'ஹெர் மெஜஸ்டி' என்ற பெயரில் இயங்கின. இனி 'ஹிஸ் மெஜஸ்டி' என்று மாறும். பாஸ்போர்ட்டை புதுப்பிப்பவர்களுக்கும் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும்.
* காமன்வெல்த் நாடுகளான நியூசிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் மன்னரைக் குறிப்பிடும் வகையில் பாஸ்போர்ட்டுகளில் மாற்றம் செய்யப்படும்.
* ராணி எலிசபெத்தின் உருவப்படம் 1960-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் பணத்தில் தோன்றியுள்ளது. இப்போது சார்லஸ் ஆட்சி செய்யும் மன்னராக இருப்பதால் பிரிட்டிஷ் பணத்தின் உருவப்படம் மாறும். பிற காமன்வெல்த் நாடுகளில் உள்ள பிரிட்டிஷ் வங்கி நோட்டுகள் மற்றும் நாணயங்களில் இனி எலிசபெத் மகாராணியின் முகம் தோன்றாது.
* ராணியின் உருவப்படம் இடம்பெறும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும், துக்கக் காலம் முடிந்ததும் கூடுதல் விவரங்கள் பகிரப்படும் என்றும் பாங்க் ஆப் இங்கிலாந்து செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
* ராணி எலிசபெத்தின் உருவம் 33 வெவ்வேறு நாடுகளில் உள்ள நாணயங்களில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி புதிய உருவம் இடம் பெறும்.
* ராணி எலிசபெத் தனது 70 ஆண்டுகால ஆட்சியில் 16 பிரிட்டிஷ் பிரதமர்கள் மற்றும் 14 அமெரிக்க அதிபர்களுடன் நட்புறவை உருவாக்கினார். இனி உலகத் தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு பதிலாக மன்னர் சார்லஸுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.