உலக சாக்லெட் தினம்

இந்த உலகத்தில் 90 சதவீதத்திற்கு மேலானவர்கள் சாக்லெட் பிரியர் களாகவே இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சாக்லெட் மீது விருப்பம் இல்லாதவர்களாக இருந்தாலும், தங்கள் வாழ்நாளில் சாக்லெட்டை ருசிக்காதவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை எனலாம். அந்த அளவிற்கு சுவை மிகுந்தது சாக்லெட்.
உலக சாக்லெட் தினம்
Published on

சாக்லெட், கோக்கோ பீன்ஸ் மரத்தில் உள்ள பழத்தின் விதையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு கோக்கோ பழத்தில் 20 முதல் 60 விதைகள் வரை இருக்கும்.

மாயன் காலத்தில் இருந்தே சாக்லெட் பயன்பாடு இருந்து வருவதாக செவிவழிச் செய்தி இருந்தாலும், 1550-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே, இந்த சாக்லெட். ஆரம்ப காலத்தில் கோக்கோ விதையில் இருந்து உருவான சாக்லெட்டை பானமாகத்தான் பருகி வந்தனர். அதன் சுவை சற்றே கசப்பாக இருந்தது. ஆனாலும் அதை பருகும்போது உற்சாகமும், வலிமையும் உண்டாவதாக மக்கள் நம்பினர்.

சாக்லெட் விதைகளை தனியாக சாப்பிட முடியாது என்பதால் சிலர், தேன், பால், பழம் போன்றவற்றில் பிசைந்தும் சாப்பிட்டு வந்தார்கள். இதுதான் சாக்லெட்டின் முதல் வடிவம் என்று கூட சொல்லலாம். நாளடைவில் விதைகள் அரைக்கப்பட்டு, அதனுடன் இனிப்பு, வெண்ணிலா போன்ற பொருட்கள் கலக்கப்பட்டது. இந்தப் பரிணாம வளர்ச்சியால் இன்று உலகம் முழுவதும் விருப்பி சாப்பிடும் உணவில் முதன்மையானதாக சாக்லெட் உள்ளது.

கி.பி. 16-ம் நூற்றாண்டில் இருந்தே, ஐரோப்பியர்கள் சாக்லெட் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால் அது சர்வதேச சாக்லெட் தினமாக உருவெடுத்தது 2009-ம் ஆண்டுதான். ஐரோப்பியர்கள் சாக்லெட்டை அறிமுகப்படுத்திய ஜூலை 7-ந் தேதியே, ஒவ்வொரு வருடமும் 'உலக சாக்லெட் தின'மாக கொண்டாடப்படுகிறது.

சாக்லெட் சாப்பிடுவதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறதோ இல்லையோ, மகிழ்ச்சியின் காரணமாக மனிதர்களின் மனம் புத்துணர்ச்சி பெறும் என்பதை மறுப்பதற்கில்லை. சாக்லட் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறைவதாகவும், இதயம் சீராக செயல்படுவதாகவும், இதய பாதிப்புகள் குறைவதாகவும், மூளைக்கு வலிமை உண்டாவதாகவும், சருமம் பாதுகாக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு சிலர், சாக்லெட்டில் தீமைகளும் இருப்பதாக சொல்கின்றனர். அவர்களுக்கு 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழியைதான் உதாரணமாக காட்ட வேண்டும். சாக்லெட்டும் அப்படித்தான், அதை அளவோடு சாப்பிட்டு நன்மைகளை மட்டுமே பெறுவோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com