உலக சைக்கிள் தினம்

உலகம் முழுவதும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ந் தேதியை உலக சைக்கிள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக சைக்கிள் தினம்
Published on

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழலை காக்கும் நோக்கிலும், சிலர் நிதி சிக்கலை சமாளிப்பதற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சைக்கிள் உலகிற்கு அறிமுகமாகியது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த 'கார்ல் வான் டிராய்ஸ்' என்பவர்தான் முதல் இருசக்கர வாகனத்தை வடிவமைத்தார். முழுவதும் மரத்திலான அதனை டான்டி குதிரை என அழைத்துள்ளனர். அதற்கு காப்புரிமையும் அவர் பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வடிவமைப்பில் மாற்றம் பெற்ற சைக்கிளில் இறுதியாக 'பெடல்' பொருத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெருமளவில் வணிக நோக்கத்துடன் சைக்கிள் உருவாக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 1890-ம் ஆண்டு சைக்கிள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி உள்ளது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகமாக இருந்தது. 1940-ம் ஆண்டு இறக்குமதி பொருட்களின் மீதான வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிலிருந்த தொழில் முனைவோர்கள், மேல் நாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே சைக்கிள் உற்பத்தி செய்யும் பணியில் இறங்கினர். அதற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை கூர்ந்து கவனித்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் நேரடியாக சைக்கிள் உற்பத்தி பணியை தொடங்கினர். அதற்கு இந்தியா சுதந்திரம் பெற்றதும் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

ஹீரோ, ஏவான், ஹெர்குலஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பல ஆண்டுகளாக சைக்கிள் உற்பத்தி தொழிலை மேற்கொண்டு வருகின்றன.

1970-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறந்தது சைக்கிள்கள்தான். வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே தனி அந்தஸ்தாக பார்க்கப்பட்டது. சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் டைனமோ அதன் முகப்பில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் ஒளிர்வதற்கான மின் சக்தியை உருவாக்கி கொடுத்தன. இப்படி இந்திய சாலையில் இளையோர் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்திருந்த சைக்கிள் மோட்டார் வாகனங்களின் படையெடுப்பால் தனது மவுசை இழந்தது. பிரபல சைக்கிள் நிறுவனமான அட்லஸ் தனது உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்கள் மட்டுமே சைக்கிளை பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com