இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிப்பு..!

சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிப்பதன் மூலம் மீதமுள்ள காடுகளையும், இயற்கை வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிப்பு..!
Published on

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வன உயிரினங்கள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ இன்றியமையாதது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்க வேண்டும்.

இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது மிக முக்கியமாகும்.

சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட தவறியதன் விளைவுகளை மனிதர்கள் தற்போது அனுபவிக்க தொடங்கி விட்டனர். மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை.

மரங்கள் இல்லையெனில் நாம் சுவாசிக்க காற்று கிடைக்காது. வெப்பநிலை பல மடங்கு உயரும் அபாயமும் உள்ளது. எனவே காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் கடும் வெள்ளம், சூறாவளி இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1972-ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்கள் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜுன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தினத்தின் கொண்டாட்டங்களுக்கு பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தின் வாயிலாக மீதமுள்ள காடுகளையும், இயற்கை வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மட்டும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் அல்ல. அனைவரது மனதிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அக்கறை ஏற்பட்ட போதிலும், பெருமளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது அவசியம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச்சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com