

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்றும் மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பு ஏற்படுகிறது.
ரீஜன்ஸ்பர்க் நகரில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வெடிகுண்டு பாதுகாப்பாக வெடிக்கச் செய்யப்பட்டபோதும், கட்டிடங்களுக்குப் பலத்தை சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்தக் குண்டை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்வதற்காக அப்பகுதியில் வசித்த சுமார் 4 ஆயிரத்து 500 பேர் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதுதொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, 550 பவுண்டு எடையுள்ள அந்தக் குண்டு பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப்பட்டபோதும், அதைச் சுற்றிலும் இருந்த பல வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கிவிட்டன என்றார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படங்களில் அந்தத் தாக்கத்தைக் காண முடிகிறது. குறிப்பிட்ட வெடிகுண்டு, எந்த நேரமும் வெடித்துச் சிதறும் அபாயம் கொண்டது என்பதால்தான் அதை செயலிழக்கச் செய்யாமல் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்ததாக வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.
இரண்டாம் உலகப் போர் முடிந்து நீண்டகாலம் கடந்தும் ஜெர்மனியில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.