

ஏழை குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால் மருத்துவராகி காடு வளர்ப்பால் கோடீஸ்வரராகவும் மாறி இருக்கிறார் டாக்டர் துரைசாமி. முள் காடாக இருந்த நிலத்தை வாங்கி அதை சீர்படுத்தி மிகப்பெரிய வேளாண் காடாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார். 156 ஏக்கரில் 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை வளர்த்து வருகிறார்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் இருந்து 24 கி.மீ தூரத்தில் இருக்கும் காஞ்சேரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அவரது வேளாண் காடு. 70 வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக செயல்படுகிறார், டாக்டர் துரைசாமி.
எங்க அப்பா, அம்மாவுக்கு சொத்துன்னு பெரிசா எதுவும் இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு தான் என்ன படிக்க வச்சாங்க. நானும் குடும்ப கஷ்டத்த புரிஞ்சுக்கிட்டு நல்லா படிச்சு டாக்டர் ஆனேன். இங்கே பக்கத்துல இருக்குற பச்சை மலையில் கவர்மெண்ட் டாக்டரா வேல கிடைச்சுது. சம்பளத்தில் ஒரு பகுதிய தனியாக சேர்த்து வைச்சேன். அந்த பணத்தில் மலைஅடிவாரத்துல இங்க 5 ஏக்கர், 10 ஏக்கர்னு கொஞ்சம் கொஞ்சமா நிலம் வாங்கினேன். 1980-களில் இந்த இடமெல்லாம் முள் காடாக இருந்துச்சு. அதனால விலையும் கம்மியா இருந்துச்சு. இப்படியே படிப்படியாக 20 வருடங்களாக இவ்வளவு இடத்தையும் வாங்கினேன்.
இடையில் மகளோட கல்யாணத்துக்கு பத்திரிகை வக்கிறதுக்காக சொந்தக்காரர் ஒருத்தரோட வீட்டுக்கு போனேன். அப்போ அவரோட தோட்டத்துல மதிய சாப்பாடு சாப்பிட்டோம். சுத்தி மரங்களா இருந்துச்சு. அதுல ஒரு மரத்துக்கு கீழே கயிற்று கட்டில போட்டு உட்கார்ந்தோம். சிலுசிலுனு காற்று அடித்தது. அந்த இயற்கை சூழல் எனக்கு ரொம்பவும் பிடிச்சுப்போச்சு. அந்த அனுபவம் தான் இந்த காடு உருவாக காரணம் என்று சந்தோஷத்துடன் வேளாண் காடு உருவான கதையை பகிர்ந்து கொண்டார்.
சரி ஜீப்ல ஏறுங்க தோட்டத்த சுத்தி காமிக்குறேன் என சொன்னவரிடம் இடைமறித்து சார், நடந்துபோனா கொஞ்சம் முழுசா பாக்கலாமே..! என்றோம்.
தம்பி நடந்து போனா முழுசா சுத்தி பார்க்க ஒரு வாரம் ஆகும். பரவாயில் லயா? என கேட்டார்.
பதில் எதுவும் சொல்லாமல் ஜீப்பில் ஏறி அமர்ந்தோம். மரங்களுக்கு இடையே மலை பாதையில் பயணித்தாம்.
செம்மரம், தேக்கு, சந்தனம், ரோஸ் உட், ஈட்டி, வேங்கை, நீர் மருது, மஞ்சள் கடம்பை, மலை வேம்புனு என் தோட்டத்தில் ஏகப்பட்ட வகை மரங்கள் இருக்குது. கிட்டத்தட்ட எல்லா வகையான டிம்பர் மரங்களையும் வச்சுருக்கேன். 2000-ல் இருந்து தான் நிறைய மரம் வைக்க ஆரம்பிச்சேன். 2012-ல் ஈஷா கூட தொடர்பு ஏற்பட்டுச்சு. ஈஷா நர்சரியில் ரொம்பவும் குறைஞ்ச விலைக்கு மரக்கன்று கொடுக்குறாங்க. அந்த கண்ணுங்க நல்லாவும் வளருது. அதனால் அவர்களிடம் ரெகுலராக கன்று வாங்கிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 60 ஆயிரம் மரக்கன்றுக்கு மேல வாங்கிருக்கேன். அதிக அளவில் வாங்கியதால், ஈஷா வேளாண் காடு குழுவில் இருக்கும் வல்லுனர்கள் இங்க நேரடியாக வந்து பாத்தாங்க. முன்னாடி எனக்கு தெரிஞ்ச அளவுக்கு ஏதோ ஒன்றை செஞ்சுகிட்டு இருந்தேன். அவங்கதான் இந்த காட்டை எப்படி முறையாக பராமரிக்குறதுன்னு எனக்கு சொல்லிக்கொடுத்தாங்க.
நிறைய பயிற்சி வகுப்புகளுக்கும், தோட்டங்களுக்கும் என்னை கூட்டிட்டு போய் காண்பித்தார்கள். எந்தெந்த மரங்கள் எங்கெங்க எப்படி வைக்கணும்னு தெளிவாக ஆலோசனை கொடுத்தாங்க. அதை எப்படி பராமரிக்குறதுனும் சொல்லி கொடுத்தாங்க. இந்த காட்டை பராமரிக்கிற மேனேஜரிடம் சொல்லி ஈஷாவுல சொல்லிக் கொடுக்குற மாதிரி செய்ய சொன்னேன். அதனால எந்த பிரச்சினையும் இல்லாம நல்லா போயிட்டு இருக்கு என சொல்லி கொண்டு இருக்கும் போது, ஆட்டு கொட்டகை ஒன்றை பார்த்ததும் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினோம்.
இங்கே 300 செம்மறி ஆடும், 400 நாட்டு கோழியும் வளர்க்குறோம். அதுகப்பாட்டுக்கு காட்டுல கிடைக்குறத திண்ணுட்டு மேஞ்சுக்கிட்டு இருக்கும். தீவனத்துக்குனு தனியா எந்த செலவும் கிடையாது. இன்னும் 400 நாட்டு கோழிங்களை வாங்கி விடலாம்னு இருக்கேன். டிம்பர் மரங்கள் மட்டுமில்லாமல் தென்னை, பாக்கு, கொக்கோ மரங்களும் ஏராளமா இருக்கு. அப்புறம் மா, பலா, வாழை, சாத்துக்குடி, மாதுளை, சப்போட்டா, நெல்லி, கொய்யானு ஏகப்பட்ட பழ மரங்களும் வைச்சுருக்கேன்.
ஆடு, கோழி, பழ மரங்களில் இருந்து மாசா மாசம் நல்ல வருமானம் வருது. அந்த பணத்துல இருந்து வேலை ஆளுங்களுக்கு சம்பளம் கொடுத்துருவேன். இதுதவிர குறுகிய கால டிம்பர் மரங்களான குமிழ், மலைவேம்பு, பெருமரம் இந்த மூன்றையும் வெட்டி விற்றதில் நல்ல வரு மானம் வந்துச்சு. வெட்டிய மரங்களில் மருதாம்பு வந்து திரும்பவும் வளர்ந்துக்கிட்டு வருது. நீண்டகால டிம்பர் மரங்களை பிள்ளைங்களுக்காக வைச்சுருக்கேன். தேவை அதிகமா இருக்குறதுனால டிம்பர் மரங்களோட விலையும் அதிகமாயிட்டு வருது என்றார்.
டாக்டராக இருந்துகொண்டு இவ்வளவு பெரிய காட்டை எப்படி கவனித்துக்கொள்கிறீர்கள்? என்று கேட்டபோது..
அதெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. எல்லாத்துக்கும் ஆள் வைச்சுருக்கேன். என்னென்ன பண்ணும்னு மேனேஜர்ட்ட சொல்லிருவேன். அவர் எல்லாத்தையும் பாத்துக்குவாரு. நான் அப்பப்போ வந்து பாத்துட்டு போவேன். காட்டில் நிறைய விலை உயர்ந்த மரங்கள் இருப்பதால் காவலுக்கு 18 நாய்களை வளர்க்குறோம். ஒவ்வொரு நாயும் அதுஅதற்கான ஏரியாவை சுற்றி பாதுகாக்கும். அதனால வெளி ஆட்கள் யாரும் அவ்வளவு சீக்கிரமா உள்ள வர முடியாது என்றார்.
காட்டை சுற்றி பார்த்துவிட்டு கீழிறங்கும் போது மேனேஜர் தயாளன் பைக்கில் அங்கு வந்தார். ஐயா, கிளீனிக்ல பேஷண்ட்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க. உங்களுக்காக வெயிட் பண்றாங்க என்று சொன்னார்.
தம்பிகளா, நான் கிளம்புறேன். நீங்க வர்றேனு சொல்லி இருந்தனால தான் இன்னைக்கி இங்க வந்தேன். நீங்க இருந்து சாப்பிட்டு போங்க என கூறி விடை பெற்றார் டாக்டர் துரைசாமி.
விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள் மற்றும் வரப்பு ஓரங்களில் நல்ல வருமானம் தரும் டிம்பர் மரங்கள் வளர்ப்பதற்கு ஈஷா வேளாண் காடுகள் குழு இலவச ஆலோசனை வழங்கி வருகிறது. எந்த மண்ணில் என்ன வகையான மரங்கள் நடலாம் என்பதற்கும் நேரில் வந்து ஆலோசனை வழங்குவார்கள். மேலும், அனைத்து வகையான மரக் கன்றுகளையும் ஈஷா நர்சரிகள் குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு agro@ishaoutreach.org என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
-தொடரும்.