

தனக்கு புதிய வேலை கிடைத்தது பற்றிய செய்தியை மகளிடம் பகிர்ந்து கொள்ளும் தந்தையை, அரவணைத்து தனது மகிழ்ச்சியை மகள் வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை பூஜா அவந்திகா என்ற பெண்மணி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் பள்ளிச்சீருடையில் கண்களை மூடிக்கொண்டு மகள் நிற்கிறாள். தந்தை அருகில் வந்ததும் கண்களை திறந்து பார்க்கும் அவர் ஆச்சரியப்படுகிறார். தந்தையின் கையில் உணவு ஆர்டர் டெலிவரி செய்யும் நிறுவனத்தின் டி-சர்ட் இருக்கிறது. உடனே உற்சாகமாக துள்ளிக்குதித்து தந்தையை அரவணைக்கிறார். இனி விரும்பியதை வாங்கி சாப்பிடலாம் என்ற எண்ணத்துடன் ஆரவாரம் செய்பவர் மீண்டும் தந்தையை கட்டிப்பிடித்து மகிழ்கிறார். மகளின் உணர்ச்சி வெளிப்பாடுகளை பார்த்து தந்தை திக்குமுக்காடிப்போய் நிற்பது பார்ப்பவர்கள் மனங்களை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது.
"அப்பாவுக்கு புது வேலை. மகளே.. நாம் இப்போது உணவை அதிகமாக சாப்பிடுவோமா'' என்று தலைப்பிடப்பட்ட இந்த வீடியோ 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும், 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது.